தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீடு இடங்களை நாளை வெளியிட வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்...
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களை பள்ளிகளின் தகவல் பலகையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் 25 சதவீத இடஒதுக்கீடு கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கு ஏப்ரல் 20-ம்
தேதியில் இருந்து மே 18-ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை அந்தந்தப் பள்ளிகளின் தகவல் பலகையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) வெளியிட வேண்டும். உதாரணமாக எல்.கே.ஜி. வகுப்பில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 200 இடங்கள் இருப்பின் அதில் 25 சதவீத இடங்களின் எண்ணிக்கையை பட்டியலில் குறிப்பிட வேண்டும்.
இந்தச் சேர்க்கையின்போது வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றோர், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம் இருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே முன்னுரிமை அளித்து சேர்க்கை வழங்கப்பட வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தனியார் பள்ளி சேர்க்கைக்கு ஏப்.20-ஆம் தேதி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களை பெற்றோர் எடுத்துச் செல்ல வேண்டும்.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்: பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் (அசல்), நலிவடைந்த பிரிவினரில் இதர வகுப்பினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருப்பின், அவர்களின் வருமானச் சான்று (அசல்), பள்ளிக்கும், மாணவர் வசிக்கும் இடத்திற்கும் இடையேயான தொலைவு ஒரு கிலோ மீட்டர் முதல் ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருத்தல் வேண்டும். (வருவாய்த் துறையினரால் அளிக்கப்பட்டுள்ள இருப்பிடச்சான்று, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை (இவற்றுள் ஏதேனும் ஒன்றின் அசல்). இந்த ஆவணங்களுடன் சென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவு செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.