விடைத்தாள் திருத்தாவிட்டால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்த பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு, தேர்வுத்துறை இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.
தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள் முடிந்து, 10ம் வகுப்புக்கு, நேற்று முன்தினம் விடைத்தாள் திருத்தம் துவங்கியது. இதில், சில இடங்களில் பட்டதாரி ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தம் செய்யாமல், புறக்கணித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பொது தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படும் தேதியை, அரசு அறிவித்துள்ள நாளில், வெளியிட வேண்டும்.
இதை புரிந்து கொள்ளாமல், ஆசிரியர்கள் சிலர், சங்கங்களின் பெயரில், புறக்கணிப்பு போராட்டம், வாயில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிகிறது. இதனால், விடைத்தாள் திருத்தம் பாதிக்கப்படும்.அரசின் அறிவிப்புக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, விடைத்தாள் திருத்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும். விடைத்தாள் திருத்த பணிக்கு வராதவர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கான பட்டியலை, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு, முகாம் அதிகாரிகள் அனுப்ப வேண்டும். விடைத்தாள் திருத்தம் சரியாக நடத்தப்படாத முகாம்களின் அதிகாரிகளின் மீதும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.