குறுஞ்செய்தி மூலம் 2 நிமிடங்களில் தேர்வு முடிவுகள்
ஏற்கெனவே அறிவித்த தேதிப்படி தேர்வு முடிவுகள் வெளியாகும்; குறுஞ்செய்தி மூலம் இரண்டு நிமிடங்களில் தேர்வு முடிவுகள் கிடைக்கும் வகையில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா அரங்கில் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப முறை, கல்லூரியைத் தேர்வு செய்யும் முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து செங்கோட்டையன் பேசியதாவது:
நமது நாட்டின் உயர்கல்வி இலக்கு என்பது 23 சதவீதம். ஆனால், தமிழகத்தின் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 44.3 சதவீதம் ஆகும். தமிழகத்தில் 539 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன. இதனால் மாணவர்கள் எளிதாக உயர்கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கிறது.
முதல் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரையில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் 2 ஆண்டுகளில் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றப்பட்டு இணையதளம் மூலம் பாடம் கற்பிக்கப்படும்.
இதற்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் ரூ.463 கோடி மதிப்பில் இணையதள வசதி ஏற்படுத்தி நவீனப்படுத்தப்படும்.
தற்போது முதியவர்கள் பலர் ஆதரவற்றவர்களாக விடப்படுகின்றனர். இது குறித்து இளையதலைமுறையினருக்கு போதிய அறிவுரை வழங்கப்படுவது இல்லை. எனவே, பெற்றோரைப் பாதுகாப்பது, பராமரிப்பது குறித்து ஒன்றாம் வகுப்பு முதல் போதிக்கப்படும் என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியாகத் தாமதம் ஆகாது.
ஏற்கெனவே அறிவித்த தேதிப்படி ( மே 16-இல் பிளஸ் 2; மே 23-இல் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்) முடிவுகள் வெளியாகும். குறுஞ்செய்தி மூலம் இரண்டு நிமிடத்தில் தேர்வு முடிவுகள் கிடைக்கும் வகையில் வெளியிடப்படும் என்றார்.