வில்லங்கச் சான்றை திருத்த இணையம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி: பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் தகவல்............
பிழையாக தட்டச்சு செய்யப்பட்ட வில்லங்கச் சான்றைத் திருத்த இணையம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என்று பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பொது மக்களுக்கு வில்லங்கச் சான்று வழங்கப்பட்டு வருகின்றன. சார் பதிவாளர் அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டதில் இருந்து வில்லங்கச் சான்று கணினி வழியாக அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இணையதளம் வழியாக வில்லங்கச் சான்றினை கட்டணமின்றிப் பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 20,000 பேர் இந்த வசதியைப் பயன்படுத்துகிறார்கள். கடந்த 1975-ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரையுள்ள வில்லங்கச் சான்றுகளை இணையதளம் (tnreginet.gov.in) வழியாக பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
தவறு இருந்தால்...இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வில்லங்கச் சான்றிலும், சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட சான்றிலும் பெயர், சொத்து விவரம் போன்றவற்றில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதனைச் சரி செய்யலாம். அசல் ஆவணங்களில் விவரங்கள் சரியாக இருந்து, வில்லங்கச் சான்றிதழ் தவறுகள் இருந்தால், அது குறித்து சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்யலாம். இந்த மனுவை ஆராய்ந்து அதுகுறித்து சரியான விவரங்களை கணினியில் பதிவு செய்து மாவட்ட பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட பதிவாளர் ஒப்புதல் அளித்தவுடன் கணினியில் உள்ள விவரங்கள் சரிசெய்யப்படும். இது வில்லங்கச் சான்றிலும் எதிரொலிக்கும். இதன்பின், சரியான சான்றை பதிவிறக்கம் செய்யலாம்.
விரைவில் தொடக்கம்: வில்லங்கச் சான்று தவறுகளை சரி செய்யும் பணியை வீட்டில் இருந்தே இணையதளம் வழியாக மேற்கொள்ளும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்.
மேலும், பொது மக்கள் பதிவு செய்த அசல் ஆவணத்திலேயே விவரங்கள் தவறாக எழுதப்பட்டிருந்தால் அதனைச் சரி செய்ய ஆவணத்தை எழுதிக் கொடுத்தவரும், எழுதி வாங்கியவரும் சேர்ந்து பிழை திருத்தல் ஆவணத்தை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். உரிய விசாரணைக்குப் பிறகு பதிவில் உள்ள தவறுகள் சரி செய்யப்படும் என்று தனது அறிவிப்பில் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.