தனியார் பள்ளியில் இலவச கல்வி எனும் மாயையை விடுத்து, அரசு பள்ளியில் தரமான கல்வியினை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்வோம்.
சில நாட்களாக தனியார் கல்வி நிறுவனங்களில் 25% இலவச கல்வி எனும் திட்டத்திற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தில் நிறைய குறைகள் இருந்த போதும் இத்திட்டம் குறித்து மக்களிடம் எடுத்து சொல்வது நல்ல விழயம் தான். ஆனால் அதை விட அரசு பள்ளிகளில் பிள்ளைகளை.சேர்க்க விழிப்புணர்வை.அதிகப்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளின் தரத்தினை அதிகரிக்க நாம் போராட வேண்டும். காரணம், அரசு பள்ளிகளுக்கு ஈடு இணை கிடையாது. அரசு பள்ளிகள் மதிப்பெண் முட்டைகளை மட்டுமே இடும் கோழிகளை உருவாக்கும் இடமல்ல. பன்முகத்தன்மை கொண்ட தளமே அரசு பள்ளிகள்.
தனியார் கல்வி நிறுவனத்தில் 25% பிள்ளைகளுக்கு இலவச கல்வி என்பதே பொய்யான கோஷம். உள்ளே நடக்கும் விழயங்கள் கூட வேண்டாம். மேலோட்டமாக பார்ப்போம். இந்த 25% மாணவர்களின் கல்விக்காகவும் அரசு, அந்த தனியார் பள்ளிக்கு கட்டணத்தை செலுத்தும் என்பதே இதன் சாரம் ஆகும். இப்படி 25% மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு பணத்தை செலவழிப்பதை விட அதனை அரசு பள்ளிகளின் தரத்திற்கு உபயோகப்படுத்தினால் அரசு பள்ளிகள் ஜொலிக்க ஆரம்பித்துவிடும்.
அரசு பள்ளிகளை புறக்கணித்து தனியாரை நோக்கி நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு அரசு பள்ளி மூடப்பட்டு வருகின்றது. இதனால் தமிழகத்தின் ஏழ்மை நிலை மக்களின் கல்வி நிலை கேள்விக்குறியாக்கப்பட்டு வருகின்றது என்பதை உணர்ந்தோமா? தரமானவற்றை தனியார் தான் அளிக்க முடியும் என்றால் அனைத்து துறைகளையும் தனியாரிடம் தாரை வார்த்து விடலாமா?
நான் அரசு பள்ளியில் படித்தவன் தான். எனது பிள்ளைகளையும் அரசு பள்ளியில் தான் சேர்த்துள்ளேன். அரசு பள்ளிகளில் உள்ள குறைகளை களைய போராடுங்கள். அதை விடுத்து, தனியாருக்கு உங்கள் பிள்ளைகளை தாரை வார்த்து கொடுத்து விட்டு, பின் சமூக மாற்றத்திற்கான போராட்டம் என்பது தொடர் கதையாக மட்டுமே போகும்.
அரசு பள்ளிகள் தரமற்றவை இல்லை. அவை நம்மால் புறக்கணிக்கப்பட்டதால் அவ்வாறாக ஆக்கப்பட்டவைகள்.