மாணவர்களின் நலன்கருதி பள்ளிகளில் மனநல கவுன்சலிங்: அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
மாணவர்களின் நலன்கருதி அனைத்து பள்ளிகளிலும் மனநல கவுன்சலிங் நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை செனாய்நகர் மாநகராட்சி பெண்கள்மேல் நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கனகராஜ். இவர் மாணவிகளை கேவலமாக திட்டியதாக மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் கடந்த 2009 ஜூலையில் புகார் கொடுத்தனர்.
இவர் கொடுத்த பதிலை பள்ளி கல்வித்துறைஏற்கவில்லை. அவருக்கு 3 ஆண்டுகளுக்கு சம்பள உயர்வை நிறுத்தி உத்தரவிட்டது.இதை எதிர்த்து கனகராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: கடந்த காலங்களில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இருந்த உறவு இப்போது இல்லை. இதனால் பல்வேறு துயர சம்பவங்கள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட 6ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கெல்லாம் காரணம் மாணவர்கள் மனரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே, மாணவர்களின் நலன்கருதி அவர்களுக்கு மனரீதியான கவுன்சிலிங் தரவேண்டும். . இந்த கவுன்சலிங் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மாணவர்களின் மனநலம் தொடர்பான ஆய்வுகள், தீர்வுகள் ஆகியவை குறித்து அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் கவுன்சிலிங் தர நிபுணர்களை அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.