பள்ளிகள் மூடும் முடிவு : 7,500 ஆசிரியர் பணியிடங்கள் பறிபோகும்..
மாணவர் எண்ணிக்கை குறைவை காரணம் காட்டி அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளை மூடுவது தனியார் பள்ளிகளை மேலும் ஊக்குவிக்கும் என்றும், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு திருப்பிவிடப்படும் நிதியை தடுத்து அரசுப்பள்ளிகளை அந்நிதியில் மேம்படுத்தலாம் என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு பள்ளிகளை மூடும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேல்நிலைப்பள்ளிகளில் 15 பேருக்கு குறைவாக இருக்கும் குரூப்பை மூட வேண்டும் என்றும், 30 பேருக்கு குறைவாக இருக்கும் குரூப் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும், இந்த குரூப்பில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் சென்று பாடம் எடுக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வி இயக்குனரின் செயல்முறைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை ஆங்கிலவழிப்பிரிவில் 15க்கும் குறைவான மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அல்லது தமிழ்வழிக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய பணி நிரவல் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 29 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் மாணவர் குறைவை காரணம் காட்டி மூடப்படும் நிலை ஏற்படும். அதோடு 20க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள 33 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்படும்.
அதோடு தொடக்கப்பள்ளிகளில் 7,500 ஆசிரியர் பணியிடங்கள் காணாமல் போவதுடன், அப்படியே பணி நிரவல் செய்யப்பட்டாலும் 5,000 ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகும். இது ஒருபுறம் என்றால் கிராமப்புறங்களில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் அப்பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும் பள்ளி கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வலியுறுத்துகிறது.
இந்த செயல்முறைகள் நடைமுறைக்கு வரும்போது கிராமப்புறங்களில் பள்ளி இடைநிற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும். சராசரி எழுத்தறிவு பெறாதவர் விகிதாச்சாரமும் உயரும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. இதன் மூலம் காமராஜரின் கனவை சிதைக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது என்பது கல்வியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி 300 குடியிருப்புகளுடைய ஊரில் 1 கி.மீ இடைவெளியில் தொடக்கப்பள்ளி, 2 கி.மீ இடைவெளியில் நடுநிலைப்பள்ளி, 32 கி.மீ இடைவெளியில் உயர்நிலைப்பள்ளி, 5 கி.மீ இடைவெளியில் மேல்நிலைப்பள்ளி இருக்க வேண்டும். ஆனால், அரசுப்பள்ளி இருக்கும் இடத்திலேயே 500 மீட்டர் இடைவெளியில் தனியார் பள்ளிகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளிப்பது புதிராக உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் கல்வியாளர்கள்.
இதே கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவீதம் ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் ஏழை மாணவர்கள் அவர்கள் விரும்பும் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட வேண்டும். இந்த விதிகளின் கடந்த ஆண்டு வரை மொத்தம் 60,000 மாணவர்களுக்கு மேல் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டு, அரசின் நிதி ₹60 முதல் ₹90 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிதியை அப்படியே அரசு பள்ளிகளுக்கு திருப்பி மேம்பாட்டுப்பணிகளை செய்திருந்தால் நிதியை பெறும் அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வியை மாணவர்களுக்கு தர முடியும். இதை ஏன் அரசு செய்யவில்லை? அப்படியென்றால் அரசுக்கே அரசுப்பள்ளிகள் மீது நம்பிக்கை இல்லையா? முதலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதை கட்டாயமாக்க வேண்டும். அத்துடன் தனியார் பள்ளிகள் தொடங்கப்படுவதற்கான கட்டுப்பாடுகளையும் கடுமையாக்க வேண்டும்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபுவிடம் கேட்டபோது, ‘பள்ளிக்கல்வி இயக்குனரின் புதிய செயல்முறைகள் அரசு பள்ளிகளை இழுத்து மூடும் அளவில் உள்ளது.
அதோடு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கைக்காக அரசு நிதி இதுவரை ₹90 கோடி வழங்கப்பட்டதை ஆண்டுக்கு 10 பள்ளிகள் வீதம் மேம்படுத்தியிருந்தால் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி உறுதி செய்யப்பட்டிருக்கும். இவ்விஷயத்தில் கல்வியாளர்களும், ஆசிரியர் சங்கங்களும் சரியான முடிவை எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும்’ என்றார்.