அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்..
தமிழக அரசுக்கு வரி மூலம் கிடைக்கும் மொத்த வருவாய் 69 சதவீதத்தில், 13 லட்சம் அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியத்துக்கு 61 சதவீதம் செலவிடப்படுகிறது. இதை சிந்தித்து அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எடப்பாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியது:
அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசுக்கு வரி மூலம் கிடைக்கும் மொத்த வருவாய் 69 சதவீதத்தில், 13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியத்துக்காக 61 சதவீதம் செலவிடப்படுகிறது. தமிழகத்தில் 8 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதேவேளையில் 13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு, மாநில மொத்த வருவாயில் 61 சதவீத நிதியை செலவிடுகிறோம். மீதியுள்ள 8 சதவீத நிதியை வைத்து 7.87 கோடி மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றவும், கடனுக்கான வட்டியையும் செலுத்தியும் வருகிறோம். எனவே அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு, சிந்தித்து செயல்பட வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அரசு ஊழியர்களை போராட்டத்துக்கு தூண்டி வருகின்றனர். அரசு ஊழியர்கள் இதை புரிந்து கொண்டு தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
எளிதாக பட்டா மாறுதல்: சார்-பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடைபெறும்போது, அங்கேயே பட்டா மாறுதலை பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சார்-பதிவாளர் அலுவலகங்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களுடன் இணைந்து செயல்படும். தனிப்பட்டா உடனே கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் பத்திரப் பதிவுகள் நடைபெறுகிறது என்றால், அவர்கள் மிக எளிதாக பட்டா மாறுதலை பெற முடியும்.
உயர்கல்வித் துறையில் புரட்சி: தமிழகத்தில் உயர்கல்வித் துறையில் புரட்சி நடைபெற்றுள்ளது. 2011-ஆம் ஆண்டு தமிழகத்தில் 21 சதவீதமாக இருந்த உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அரசின் திட்டங்களால், தற்போது 46 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இந்திய அளவில் உயர்கல்வித் துறையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு: வறட்சிக் காலத்தில் கூட விலைவாசி உயராமல், குடிநீர் பிரச்னை இல்லாமல் பார்த்துக் கொண்டோம். குடிமராமத்துத் திட்டத்தில் ரூ.100 கோடியில் 1,519 ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டன. மேலும் 1,600 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, ரூ.331 கோடியில் சீரமைக்கப்பட உள்ளன.
நிலத்தடி நீர்மட்டம் உயர ஓடைகளில் தடுப்பணை கட்ட மூன்றாண்டு காலத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.350 கோடி நிதி ஒதுக்கி தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன என்றார் முதல்வர்.