"பாடத்திட்டத்தை வகுப்பதில் தலையீடு ஏதுமில்லை': கல்வியியல் ஆராய்ச்சி இயக்குநர் அறிவொளி
பாடத் திட்டத்தை வகுப்பதில் முதல் முறையாக எந்தவொரு தலையீடும் இல்லை என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இயக்ககத்தின் இயக்குநர் க.அறிவொளி கூறினார்.
தமிழ்நாடு மாணவர்- பெற்றோர் நலச் சங்கம் சார்பில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் திட்ட உருவாக்கம் என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் க.அறிவொளி பேசியது:-
தலையீடு ஏதுமில்லை: பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு புதிய தடத்தை தமிழக அரசு பதித்திருக்கிறது. பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் பாடத்திட்டம் உருவாக்கத்தில் முதல் முறையாக எந்தவொரு தலையீடும் இல்லை. மாறாக ஒரு மிகப்பெரிய மாற்றத்துக்கான பாதையை வகுப்பதற்கு ரூ.40 கோடி நிதியை தமிழ்நாடு எஸ்சிஇஆர்டி-க்கு வழங்கப்பட்டது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் அடைவு குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தியது. அதில் 5-ஆம் வகுப்பு வரை எந்தப் பிரச்னையும் இல்லை; ஆனால் அதற்குப் பிறகு குழந்தைகளின் அடைவுத்திறன் படிப்படியாகக் குறைகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு நடுநிலை, உயர்நிலை வகுப்புகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம்.
ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அதில் அவர்கள் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைந்த கணினி வழி கற்பித்தல் (ஐசிடி) முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அது பாடமாகவும் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு புத்தகத்திலும் ஐசிடி கார்னர் என்ற ஒரு பகுதியும் இருக்கும். அதேபோன்று, அனைத்து பாடநூல்களிலும் க்.யு.ஆர் குறியீடு முறை இருக்கும். அதை செல்லிடப்பேசியில் ஸ்கேன் செய்து பாடங்கள் குறித்து இணையதள தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். ஒரு பாடத்துக்கு இரண்டு க்யு.ஆர்.குறியீடுகள் இருக்கும்.
மின் நூல்கள்: புதிய பாடத்திட்டத்தில் மின்நூலை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதில் வழக்கமான பாடநூல்களில் இடம்பெற்றிருக்கும் தகவல்களைக் காட்டிலும் கூடுதலான தகவல்கள் இடம் பெற்றிருக்கும். புதிய பாடத் திட்டத்தை வகுப்பறைகளில் மாணவர்களுக்கு எப்படி கொண்டு செல்வது என்பதற்கு ஒரு தரமான வழிகாட்டுதல் தேவை.
அதற்காக ஆசிரியர் வழிகாட்டு கையேட்டை தயாரித்துள்ளோம். அதில் ஒவ்வொரு பாடங்களையும் எப்படி நடத்துவது, எவ்வளவு நேரம் நடத்த வேண்டும்; பாடத்துக்கான குறிப்புகளை தயார் செய்யும் முறை, மதிப்பீடு செய்யும் முறை என பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் பாடங்கள் குறித்து உலகம் முழுவதும் இருக்கக் கூடிய தரவுகள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய பாடத் திட்ட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பாடங்களை மாணவர்கள் இரண்டு முறை படித்தாலே புரியக் கூடிய அளவில் எளிதான நடையில் எழுதப்பட்டுள்ளது. கல்வியிலும், சமுதாயத்திலும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக இந்தப்பாடத்திட்டம் இருக்கும் என்றார்.
கற்றலில் குறைபாடு: அரசு புதிய முயற்சி
கற்றலில் குறைபாடு பிரச்னைகளைக் களைவது தொடர்பாக, தமிழக அரசு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிவொளி தெரிவித்தார். இதுகுறித்து, அவர் மேலும் பேசியது:-
கற்றலில் குறைபாடுடைய குழந்தைகளைக் கண்டறிவதற்காக அதில் புகழ்பெற்ற மருத்துவர்களைக் கொண்டு 10 இடங்களில் வகுப்பறைகளில் மாதிரி சோதனைகளை நடத்தியுள்ளோம்.
மாணவர்களிடத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதும் அது குறித்த விவரங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அது குறித்து இங்குள்ள கல்வியல் நிபுணர்கள் ஆய்வு செய்து ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட முறையில் என்ன தீர்வு என்பதை ஆசிரியருக்குப் பரிந்துரைத்தனர்.
இதை மூன்று மாதமாக செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று கற்றலில் குறைபாடு பிரச்னையைக் கண்டறிவது எப்படி, அதை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்த தகவல்களை பாடத்திட்டத்தில் புகுத்தியுள்ளோம். இந்தத் திட்டத்துக்கு அரசு பெரும் நிதியை வழங்கியுள்ளது என்றார் அறிவொளி.