'மொபைல் ஆப்' வழியே முன்பதிவில்லா டிக்கெட்...........
சென்னை:'மொபைல் ஆப்' வாயிலாக, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுக்கும் வசதி, தெற்கு ரயில்வே முழுவதும், இன்று நடைமுறைக்கு வருகிறது.
பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தவும், டிக்கெட் கவுன்டர்களில், பயணியர் காத்திருப்பதை தவிர்க்கவும், ரயில்வேயில், 'யுடிஎஸ்' என்ற, 'மொபைல் ஆப்' வசதி, சென்னையில், 2015ல் அறிமுகம் செய்யப்பட்டது. மொபைல்போனில், 'கூகுள் ப்ளே ஸ்டோரில்' இருந்து, 'யுடிஎஸ் - மொபைல் ஆப்'பை, பதிவிறக்கம் செய்யலாம்.அதிலுள்ள, 'ஆர் வாலட்'டில் இணையதள வங்கி தொடர்பை பயன்படுத்தி, டிக்கெட் பதிவு செய்யலாம்.இதன்படி, சென்னையில், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் மின்சார ரயில்களில், முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்வதற்கான, டிக்கெட் பெறும் வசதி உள்ளது.சென்னையில் மட்டுமே பயன்பாட்டில் இருந்த, இந்த, 'மொபைல் ஆப்' வசதி, இன்று முதல், தெற்கு ரயில்வே முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு டிக்கெட், மாதாந்திர சீசன் டிக்கெட் மற்றும் பிளாட்பார டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம். இவ்வசதியில் டிக்கெட் பதிவு செய்பவர், ரயில் நிலையத்தில் இருந்து, 25 மீட்டரை தாண்டியும், 5 கி.மீ., எல்லைக்குள்ளும் இருக்க வேண்டும். மொபைல் போனில் பதிவாகும், 'டிக்கெட்'டை காண்பித்து, ரயிலில் பயணம் செய்யலாம். டிக்கெட் பரிசோதகர் கேட்கும்போது, இந்த பதிவை காட்டினால் போதும்.