பள்ளி முடிந்தும் நற்சான்று வரவில்லை : 20 ஆயிரம் மாணவர்கள் ஏமாற்றம்.
சிவகங்கை: விடுப்பு எடுக்காத 20 ஆயிரத்து 739 மாணவர்களுக்கு பள்ளி முடிந்தும் நற்சான்று வராததால் ஏமாற்றமடைந்தனர்.
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 210 வேலை நாட்களில், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத ஆசிரியர், மாணவர்களுக்கு நற்சான்று வழங்கப்படும் என, கல்வித்துறை அறிவித்தது.2016-17க்கான வருகைப் பதிவேட்டை உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் குழு ஆய்வு செய்தது. மாநிலத்தில் 45 ஆயிரத்து 120 பள்ளிகளில் பணிபுரியும் 2.21 லட்சம் ஆசிரியர்களில் 51 பேர்; 37.81 லட்சம் மாணவர்களில் 20 ஆயிரத்து 739 பேர் விடுப்பு எடுக்காதது கண்டறியப்பட்டன.இதில் பிப்., 12 ல் சென்னையில் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களுக்கு மட்டும் நற்சான்று வழங்கினார். ஏப்., 20 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், இதுவரை மாணவர்களுக்கு சான்று வழங்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், ' மாணவர்களிடம் ஒழுக்கத்தை ஏற்படுத்தத்தான் 100 சதவீத வருகைக்கு நற்சான்று வழங்கப்படுகிறது. அதை குறித்த காலத்தில் வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது,' என்றனர்.