சம வேலைக்கு சம ஊதியம்: நள்ளிரவிலும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள்
சம வேலைக்கு சம ஊதியம்' வழங்கக் கோரி தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னைக்கு வந்து இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் நள்ளிரவு கடந்தும் தொடர்ந்தது.
போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டு, ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியைக் கடந்தும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டத்தைக் கைவிடுமாறு போலீஸார் தொடர்ந்து வற்புறுத்தியும் கூட ஆசிரியர்கள் அங்கிருந்து வெளியே செல்லவில்லை. மேலும் போலீஸார் கொடுத்த உணவைச் சாப்பிட அவர்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
போராட்டத்துக்குக் காரணம் என்ன? தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 30.6.2009-ஆம் தேதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முந்தைய மாதத்தில் (31.05.2009) பணி நியமனம் செய்யப்பட்ட சக இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஊதிய முரண்பாடு பெரிய அளவில் உள்ளது. ஒரே கல்வித் தகுதி, ஒரே பணி; ஆனால், சம்பளத்தில் மட்டும் அதிக வித்தியாசம் உள்ளது.
அதை உடனடியாகக் களைய வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சென்னை டிபிஐ வளாகத்தில் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதன்படி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஏராளமான ஆசிரியர்கள் திங்கள்கிழமை டிபிஐ வளாகத்தில் குவிந்தனர். ஆசிரியர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததால் அவர்களை போராட்டத்தில் ஈடுபட போலீஸார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்களை போலீஸார் எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் காவலில் வைத்தனர்.
இது குறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் இயக்க மாநில பொதுச் செயலாளரான ராபர்ட் உள்ளிட்ட ஆசிரியர் பிரதிநிதிகள் கூறியது:- 'தமிழகத்தில் 6- ஆவது ஊதியக் குழு அமல்படுத்தும் வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 22 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. 6-வது ஊதியக் குழுவில் அது முற்றிலும் மறுக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களான எங்களைத் தவிர, மற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது.
ரூ. 15,000 வரை ஊதிய முரண்பாடு: 1.6.2009-க்கு முன் பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியம் 8,370-2,800 எனவும், 1.6.2009- க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு 5,200-2800 எனவும் அடிப்படை ஊதியத்தில் 3,170 குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு ஒரு நாள் முன்பாக பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் தற்போது மாதம் ரூ.42 ஆயிரம் வரையிலும், நாங்கள் (போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்) ரூ.26,500 வரையிலும் ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டைத்தான் களைய வேண்டும் என்று போராடி வருகிறோம்.
9 ஆண்டுகளாக கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை: மத்திய அரசின் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை நாங்கள் கேட்கவில்லை; மாநில அரசின் பணியாற்றும் சக ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தைத்தான் கேட்கிறோம். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதை கருத்தில் கொண்டு தற்போது குடும்பத்துடன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.