ஊருக்காக, ஆசிரியர் பணியைத் துறந்தவர்!!
பொது சேவையில் ஈடுபடுவதற்காக தன் ஆசிரியை பணியைத் துறந்திருக்கிறார் இங்கொருவர். சென்னை அண்ணாநகர், மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் நிர்மலா (38). இவரது கணவர் நந்தகுமார், தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு கதிரொலி என்ற மகளும், கோவிந்தராஜன் என்ற மகனும் உள்ளனர்.
நிர்மலா சென்ற வருடம் வரை சென்னையில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். வெகுநாளாக இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதனால் ஆசிரியை பணியை துறந்து, சமூக சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
இதையடுத்து கடந்த 26ஆம் தேதி அம்பத்தூர் ஏரிக்குச் சென்று, ஏரியில் செடி, கொடிகள் அனைத்தும் தண்ணீர் செல்ல வழியில்லாமல் அடைத்து இருப்பதை கண்டார். உடனே, நிர்மலா யோசிக்காமல் ஏரியில் இறங்கி செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இவரது சேவையைக் கண்ட பொதுமக்களும் அதிகாரிகளும் ஆதரவு அளித்ததோடு நிர்மலாவைப் பாராட்டி உள்ளனர்.
இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் தஞ்சைக்கு சென்றுள்ளார். அங்கு பெரிய கோயிலில் கொடிமரத்து மூலையில் உள்ள அகழி வெங்காயத் தாமரைகளால் மூடி இருப்பதை கண்டு, உடனே அகழியைச் சுத்தப்படுத்தும் பணியில் தனியாக இறங்கினார். இவருடைய செயல், அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. இதுகுறித்து நிர்மலா கூறுகையில், “ஆசிரியர் பணியாற்றி கொண்டிருக்கும்போதே பொது சேவையில் ஈடுபட வேண்டும் என்று பல நாட்களாக நினைத்து வந்ததால் அப்பணியை விட்டு வந்தேன். வீடும் ஊரும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். சுத்தமின்மையால்தான் பல நோய்கள் பரவுகின்றன. குறிப்பாக நீர்நிலைகள் சுத்தமாக இருந்தால்தான் தண்ணீர் மாசடையாது. அதனால் முதல்முயற்சியாக குப்பைகளால் நிறைந்து இருந்த அம்பத்தூர் ஏரியை சுத்தப்படுத்தினேன். மேலும், தஞ்சைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது, கொடிமரத்து மூலையில் உள்ள அகழி, வெங்காயத் தாமரையால் மூடிக்கிடப்பதை பார்த்து என் மனம் வேதனை அடைந்தது. உடனே பேருந்தை விட்டு இறங்கி அகழியைச் சுத்தப்படுத்தினேன். இந்த சேவை எனக்கு மனநிறைவைத் தருகிறது” என்கிறார் நிர்மலா.