அரசு பள்ளிகளில் 'கழிப்பறை வசதி' கணக்கெடுப்பு
மதுரை, திண்டுக்கல், தஞ்சை மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் குறித்து கல்வி அதிகாரிகள் அவசர ஆய்வில்ஈடுபட்டுள்ளனர். 'தினமலர்' நாளிதழில் 2014 ஆக., 8ல் வெளியான செய்தி அடிப்படையில், மதுரை உயர் நீதிமன்றத்தில்தாக்கலான வழக்கு ஒன்றில், 'அக்.,27ல் திண்டுக்கல், தஞ்சையிலும், அக்.,31ல் மதுரை மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதியை 'வழக்கறிஞர் கமிஷனர்கள்' ஆய்வு செய்ய வேண்டும்' எனஉத்தரவிடப்பட்டது.
இதன்படி, இம்மூன்று மாவட்டங்களிலும் கல்வி அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி, கழிப்பறை விபரங்களை உடனடியாக தெரிவிக்க டி.இ.ஓ.,க்கள், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர். இதற்காக பிரத்யேக படிவம் தயாரித்து, 'பள்ளி, மாணவர் எண்ணிக்கை விபரம், பள்ளியில் பயன்பாட்டில் உள்ள கழிப்பறை எண்ணிக்கை, தண்ணீரின்றி பயன்படுத்த முடியாத கழிப்பறை எண்ணிக்கை, கூடுதல் கழிப்பறை தேவைப்படும் பள்ளிகள், கட்டட இடவசதி உள்ள பள்ளிகள்...' என விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
புதிய சிக்கல்: கழிப்பறை வசதிகள் குறித்து தலைமை ஆசிரியர் அளித்த விபரங்கள் அடிப்படையில்தான் பயன்பாட்டில் உள்ள கழிப்பறை எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. அரசு பள்ளிகளில் 'கழிப்பறை பிரச்னை' எழும்போதெல்லாம், இந்த ஆதாரங்களைதான் கல்வித்துறை தெரிவித்தது.ஆனால், தற்போது 'வழக்கறிஞர் கமிஷனர்கள்' பள்ளிகளில் ஆய்வு செய்து, உண்மை நிலவரத்தை தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால்,கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதிகாரி ஒருவர் கூறியதாவது:கழிப்பறை பயன்பாட்டில், அடிப்படையிலேயே குழப்பம் நீடிக்கிறது. மாணவர், கழிப்பறை விகிதம் குறித்து அனைவருக்கும் கல்வி திட்டத்திலும் (எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்திலும் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மாறுபடுகிறது. உயர்கல்வி அதிகாரிகளும் இதுகுறித்து தெளிவான விபரம் தெரிவிக்கவில்லை.தலைமை ஆசிரியர்கள் கொடுத்த விபரம் அடிப்படையில்தான் கழிப்பறை செயல்பாடு குறித்து முடிவு எடுக்கப்பட்டது; பலர் தவறான தகவல்களை அளித்துள்ளனர். இதனால், 'வழக்கறிஞர் கமிஷனர்கள்' சென்று பார்ப்பதற்குள் மீண்டும் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறிய பழுது,தண்ணீர் இல்லாததால் பயன்படாமல் உள்ள கழிப்பறைகளை, இரண்டு நாட்களுக்குள் சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.