தமிழ் பாட வீடியோ 'சிடி:' அரசு உதவி பள்ளிகளுக்கு மறுப்பு
ஐந்தாம் வகுப்பு வரையுள்ள, தமிழ் பாட புத்தகத்தின் வீடியோ, 'சிடி'யை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இலவசமாக வழங்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
சமச்சீர் கல்வியில், தமிழ் பாடத்தை எளிதில் கற்றுக்கொடுக்க, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடங்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், வீடியோ பாடங்களாக தயாரிக்கப்பட்டுள்ளன.
'தாயெனப்படுவது தமிழ்' என்ற, இந்த வீடியோ தொகுப்பு, இணையதளத்தில், 'யூ டியூப்'பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மாணவர்களின் நடனத்துடன், தமிழகத்தின் பல ஊர்களில், 40 பாடங்களும், பாடல்களாக படமாக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ தொகுப்பு, 'சிடி'யை, 35 ஆயிரம் தொடக்க பள்ளிகளுக்கு, இலவசமாக அனுப்ப, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு, வீடியோ, 'சிடி'யை இலவசமாக தர, மாவட்ட அதிகாரிகள் மறுத்துள்ளனர். 'தமிழகத்தின் பல கிராமங்களிலும், அரசு தொடக்க பள்ளிகளை விட, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தான், ஏழை மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர். அவர்களுக்கு பலன் தரும் வகையில், பாடல், 'சிடி'யை இலவசமாக வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்