பள்ளியை தக்க வைக்க ஆசிரியர்களின் டெக்னிக்; மேலாண்மை பதிவில் குளறுபடி !!
இ.எம்.ஐ.எஸ்.,(எஜிகேஷனல் மேனேஜ்மென்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்) என்ற திட்டத்தில், தமிழகத்தில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்கள் தொகுக்கப்படுகிறது.
அதாவது பள்ளி துவங்கிய நாள், மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் சேர்க்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆண்டுதோறும் பள்ளி வாரியாக சேகரிக்கப்படுகிறது.
இதேபோல், மாணவர்களின் பிறந்த தேதி, தந்தையின் பெயர், ரத்தவகை, வங்கி கணக்கு எண், ஆதார் விவரங்கள், ஆசிரியர்கள் பள்ளியில் சேர்ந்த நாள், கல்வித்தகுதி, அனுபவம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. பள்ளி வாரியாக தொகுக்கப்பட்ட விவரங்கள், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டன.
இதற்காக பிரத்கேயமான முறையில், பள்ளிக்கல்வித்துறை, https:/emis.tnschools.gov.in என்ற தகவல் மேலாண்மை முறை இணையதளத்தை உருவாக்கியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இம்முறையில், பல்வேறு கோல்மால் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த சில கல்வியாண்டுக்கு முன் உருவாக்கப்பட்ட, தகவல் மேலாண்மை முறையை, ஆசிரியர்கள் தங்கள் சுயலாபத்துக்காக பதிவு செய்துள்ளனர். அதாவது தாங்கள் பணிபுரியும் பள்ளியை தக்க வைக்க, ஆன்-லைனில் பதிவு செய்தபோது, மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து பதிவேற்றம் செய்தனர்.
மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ஆசிரியர்கள் பணி நியமிக்க வேண்டும் என்பது விதி. மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து, அதே பள்ளியை தக்க வைத்த, ஆசிரியர்களின் விவரங்கள், பள்ளி கல்வித்துறைக்கு தெரிய வந்தது.
வகுப்பறை வருகை பதிவேட்டையும், ஆன்லைன் விவரங்களையும் ஒப்பிட்டபோது, மாணவர்களின் எண்ணிக்கை வேறுபட்டது. நடப்பு கல்வியாண்டில், தகவல் மேலாண்மை முறையில் பதிவு செய்த விவரங்களில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விகிதாச்சார முறையை முறைப்படுத்தும் பணி அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
இதில், ஆன்-லைனில் ஆதார் எண் டபுள் என்ட்ரி, போலியான பதிவு இருந்தால் அதன் விவரங்கள் அழிக்கப்படுகிறது.
இறுதியாக தகவல் மேலாண்மையில், உறுதிபடுத்தப்பட்ட விவரங்களை, அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், இனி ஒரே பள்ளியை ஆசிரியர்கள் தக்க வைக்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.