மாணவியர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி: தமிழ் வளர்ச்சித்துறை நடத்துகிறது
திருவள்ளூர் மாவட்ட மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் திருவள்ளூரில் நவம்பர் 2-ம் தேதி நடத்தப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் இடையே பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் 11, 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
மேல்நிலை வகுப்புகள்
அந்த வகையில், நடப்பாண்டுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி நவம்பர் 2-ம் தேதி திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடக்கும் இந்த போட்டிகளில், ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியில் இருந்தும், ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.
போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து ஆளறிச்சான்று பெற்று போட்டியில் பங்கேற்கலாம்.
கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசு 10 ஆயிரம் ரூபாயும், 2-ம் பரிசு 7 ஆயிரம் ரூபாயும், 3-ம் பரிசு 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.