TET- அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2018 பணியிடங்களில் விரைவில் ஆசிரியர்கள் நியமனம்
அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வின் மூலம் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.
இப்போதைய நிலையில் சென்னை மாவட்டம் தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதேநேரத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் 2 ஆயிரத்து 533 பணியிடங்கள் உபரியாக உள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிய வந்தது. இதில் ஆயிரத்து 992 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 541 பேர் மட்டுமே பணிபுரிய வேண்டும். அந்த அடிப்படையில் உபரியாக உள்ள ஆயிரத்து 992 ஆசிரியர்கள், காலியாக உள்ள இடங்களில் விரைவில் பணியமர்த்தப்படுவர். அதன்படி 3 ஆயிரத்து 170 பணியிடங்களில் ஆயிரத்து 178 ஆக காலிப்பணியிடங்கள் குறையும்.
அதேபோல் சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் மூலம் 840 புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்தம் 2 ஆயிரத்து 18 பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இத்தகவலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.