ஏர்வாடியில் பள்ளி மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பாதிப்பு
ஏர்வாடியில் மின்விளக்கு வெளிச்சத்தால் பள்ளி மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நேற்று இரவு ஆண்டு விழா நடந்தது. மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் இதில் பங்கேற்றனர். விழாவிற்காக சக்தி வாய்ந்த மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
விழா முடிந்த நிலையில், இன்று காலையில் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு கண்ணில் வீக்கம், எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, 60 மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்கைகாக அனுமதிக்கப்பட்டனர்.
அதிக வெளிச்சம் காரணமாக கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2 நாளில் இது சரியாகிவிடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக ஒளி, ஒலி அமைப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது ஏர்வாடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கண் எரிச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர்களை சந்தித்து நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆறுதல் கூறினார். அப்போது மாணவர்கள் உட்பட அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்