பள்ளி விழாவில் அலங்கார மின்விளக்குகளால் மாணவர்கள் உள்பட 130 பேருக்கு கண்களில் பாதிப்பு....
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியில் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அதிக திறன் கொண்ட மின்விளக்குகளைப் பயன்படுத்தியதால், விழாவில் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர் உள்பட 130 பேருக்கு கண் அழுத்தம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.
ஏர்வாடியில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் எஸ்.வி. இந்து தொடக்கப் பள்ளியில் 100}க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்காக நிகழ்ச்சி நடைபெற்ற அறையில் அதிக திறன் கொண்ட அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், விழாவில் பங்கேற்ற பள்ளிக் குழந்தைகள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு இரவில் கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. கண்களில் நீர் வடியத் தொடங்கி, சிவந்தும் காணப்பட்டது.
பள்ளியின் தாளாளர் பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியை (பொறுப்பு) சித்ரா, ஆசிரியர்கள் உள்பட 130 பேருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை காலை 83 குழந்தைகள், மாணவர்கள், பெற்றோர் உள்பட 117 பேர் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர். இதுதவிர பாதிக்கப்பட்ட 13 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக கண் பார்வைத் திறன், கரு விழிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டன. அனைவருக்கும் கண்களில் மருந்திட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், வலி நிவாரணம், எதிர்ப்பு சக்திக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டன.
கோட்டாட்சியர் இல. மைதிலி, சார் ஆட்சியர் ஆகாஷ், அரசு மருத்துவமனை டீன் எஸ்.எம். கண்ணன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், நான்குனேரி வட்டாட்சியர் வர்கிஷ் மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தனர்.
ஆட்சியர் விசாரணை: மருத்துவமனைக்கு வந்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நடந்த சம்பவம் குறித்து குழந்தைகள், பெற்றோர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: ஏர்வாடி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அதிக திறன் கொண்ட மின்விளக்குகள் பயன்படுத்தியதால் குழந்தைகள், பெற்றோர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு கண் பார்வையில் எந்தவித பாதிப்பும் இல்லை. 2 தினங்களில் கண்ணில் ஏற்பட்ட எரிச்சல், பாதிப்பு குணமாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அனைவரும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
ஏர்வாடியில் அரசு மருத்துவக் குழுவினர் 2 தினங்கள் முகாமிட்டு வீடு வீடாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களின்போது எந்த மாதிரியான விளக்குகள் பயன்படுத்துவது என்பது குறித்து பல்வேறு துறைகள் மூலம் ஆய்வு செய்து தகுந்த சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றார் அவர்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக பள்ளித் தாளாளர், ஒலி ஒளி அமைத்தவர்கள் மீது ஏர்வாடி போலீஸர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.