தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கு 250 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது!!!
மருத்துவ படிப்பில் சேர இந்தியா முழுவதும் ‘நீட்’ என்கிற தேசிய தகுதி மற்றும்
நுழைவுத்தேர்வு அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு முதலே நீட் தேர்வில் மாணவ-மாணவிகள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு நடத்தப்பட்டது.
தமிழக அரசு பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு கடந்த ஆண்டு வரை 2 ஆயிரத்து 900 இடங்கள் இருந்தன. அவற்றில் 455 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்றுவிட்டது.
மதுரை, நெல்லை மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே தலா 150 இடங்கள் இருந்தன. வரும் கல்வி ஆண்டில் கூடுதலாக 2 மருத்துவ கல்லூரிகளிலும் தலா 100 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் ஏற்கனவே 100 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு 50 இடங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 250 இடங்கள் அதிகரித்து உள்ளது. இதற்கான அனுமதியை இந்திய மருத்துவ கவுன்சில் அளித்துள்ளது.
தமிழகத்தில் 11 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 1,450 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டுக்கு 881 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 569 இடங்களும் அடங்கும்.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 12-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. நுழைவுத்தேர்வு மே 6-ந் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.