'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பிழைகளை திருத்த ஏற்பாடு
'ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள பிழைகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை; அவற்றை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது' என, உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 'ஸ்மார்ட்' கார்டில் உள்ள, பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள், மத்திய அரசின், 'ஆதார்' அட்டையில் இருந்து எடுக்கப்பட்டவை. ஸ்மார்ட் கார்டில் உள்ள விபரங்களை, தமிழில் வழங்குமாறு, அரசு தெரிவித்தது. ஆனால், ஆதார் விபரங்கள், ஆங்கிலத்தில் இருந்தன. அதேசமயம், மத்திய அரசின் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், மக்களின் முகவரி தமிழில் உள்ளன. அவை, ஸ்மார்ட் கார்டில் பதியப்பட்டன. பழைய முகவரியில் இருந்த பலர், தற்போது புதிய முகவரியில் வசிப்பதாக தெரிகிறது. எனவே, முகவரி தவறாக இருந்தால், யாரும் கவலை அடைய தேவையில்லை. கார்டுதாரர், எந்த கடையில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், தங்கள் கார்டை பதிவு செய்தாரோ, அதே கடையில் பொருட்களை தொடர்ந்து வாங்கலாம். அந்த கடையில் தான், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு தரும்போது, முகவரி, பிழை இருந்தால், பொது வினியோகத் திட்டத்தின் இணையதளத்தில் சரி செய்து கொள்ளலாம். புது கார்டை, தேவைக்கு ஏற்ப, அரசு இ -சேவை மையங்களில் வாங்கிக் கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.