எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்...
கோவை:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனர் தெரிவித்தார்.
எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மே, 7ல், 'நீட்' தேர்வு நடந்தது. தமிழகத்தில், 88 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ளன.
மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறியதாவது:
பிளஸ், 2 தேர்வு முடிவுகள், நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில், வழிகாட்டு ஏடு மற்றும் விண்ணப்பங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும், 27ம் தேதி முதல் வினியோகிக்கப்படும். மாநிலத்தில் உள்ள, 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களை ஜூலை, 7ம் தேதி மாலை 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 8 மாலை 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்ப படிவங்கள் பெற, 'செயலாளர், தேர்வு கமிட்டி, கீழ்ப்பாக்கம், சென்னை' என்ற பெயரில், 500 ரூபாய்க்கான வரைவோலை (டி.டி.,) எடுக்க வேண்டும். சுயநிதி தனியார் கல்லுாரிகளுக்கான விண்ணப்பத்துக்கு, 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு இலவசம்; மாணவர்கள் அதற்கான ஜாதி சான்று நகலை வழங்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளுக்கான விண்ணப்ப விபரங்கள் குறித்து விண்ணப்பத்தின் முகப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும். விண்ணப்பங்கள் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணிவரை வினியோகிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் தட்டுப்பாடு இல்லாமல் படிவங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் அனைவருக்கும் வழங்கப்படும். மாணவர்கள் நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை. மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க வேண்டியதில்லை. ஜூலை, 14ம் தேதி தரப்பட்டியல் வெளியிடப்படும். விண்ணப்பங்களுக்கான டி.டி., எடுப்பதற்கு அந்தந்த மருத்துவக் கல்லுாரிகளில் வங்கிகளின், சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.