இ - சேவை மையங்களில் 75 ஆயிரம் மனுக்கள் குவிந்தன.....
இ - சேவை மையங்களில், மாணவர்கள் அதிக அளவில் முற்றுகையிடுவதால், ஒரே நாளில், 75 ஆயிரம் மனுக்கள் குவிந்தன. தமிழகத்தில் உள்ள, 9,000க்கும் மேற்பட்ட, இ - சேவை மையங்களில், அரசு சேவைகளை பெற வசதி செய்யப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்கள், பல்வேறு சான்றிதழ்கள் கோரி, இம்மையங்களில் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால், சில வாரங்களாக, இ - சேவை மையங்களில் உள்ள கணினிகள் செயலிழந்தன. தற்போது, அந்த பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டதால், அதிக அளவில் மாணவர்கள் வர துவங்கியுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: இ - சேவை மையங்களில், தினசரி, 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வரும். ஆனால், தேர்வு முடிவுகள் வெளியான பின், 65 ஆயிரம் விண்ணப்பங்கள் வரத் துவங்கின. நேற்று முன்தினம், மிக அதிக அளவாக,
75 ஆயிரம் மனுக்கள் குவிந்தன. அதில், அதிகபட்சமாக, வருமான சான்று கோரி, 25 ஆயிரத்து, 743 பேர்; இருப்பிடச் சான்று, 20 ஆயிரத்து, 300 பேர்; ஜாதிச் சான்று, 15 ஆயிரத்து, 959 பேர்; முதல் தலைமுறை பட்டதாரி சான்றுக்காக, 8,648 பேர் மனு செய்துஉள்ளனர். தேர்வு முடிவு வெளியான பின், இ - சேவை மையங்களில், விண்ணப்பங்களின் எண்ணிக்கை, ஐந்து மடங்கு அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.