லேப்டாப், சைக்கிள் திருட்டால் பாதிக்கும் தலைமையாசியர்கள் : அமைச்சரிடம் வலியுறுத்தல்
மதுரை: 'தமிழகத்தில் லேப்டாப், சைக்கிள் திருட்டு நடந்த அரசு பள்ளிகளில் அதற்கான பணத்தை தலைமையாசிரியர்கள் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்,' என கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் வலியுறுத்தப்பட்டது.
மதுரையில், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழகம் மாநில சட்ட செயலாளர் அனந்தராமன், மாவட்ட தலைவர் சிவக்குமார், செயலாளர் நாகசுப்பிரமணியன், துணைத் தலைவர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் ஆகியோர் அமைச்சரிடம் மனு அளித்தனர்.
பின் அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில், 10 சதவீதத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்ட, இலவச லேப்டாப் மற்றும் சைக்கிள்கள் திருடு மற்றும் காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் உள்ளன. இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தற்போது பணியாற்றும் தலைமையாசிரியர்கள் அதற்கான பணத்தை செலுத்த வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இதை தவிர்க்க வேண்டும். அரசு பள்ளிகளில் இரவு காவலர், ஆய்வக மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாணவர்களிடம் ஆங்கில வழி கல்வி கட்டணம் வசூலிப்பதை தவிர்த்து, அரசே அதை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினோம். நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார், என்றனர்.