தொகுப்பூதியத்தில் பரிதவிக்கும் SSA பணியாளர்கள் : திட்ட மானியமும் குறைக்கப்பட்டதால் பாதிப்பு....
கடந்த 12 ஆண்டாக நிரந்தர பணியில்லாமல் 'சர்வ சிக் ஷா அபியான்' (எஸ்.எஸ்.ஏ.,)திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பரிதவிக்கின்றனர். அரசின் மானியமும் குறைக்கப்பட்டதால் குறைந்த ஊதியத்தில் சிரமப்படுகின்றனர்.
மாநிலத்தில் சர்வ சிக் ஷா அபியான்' திட்டத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகள், மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன. இதில் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர், கண்காணிப்பாளர் தவிர்த்து, வட்டார கணக்காளர், பள்ளி கணக்காளர், கணினி 'புரோகிராமர்', கணிணி பயிற்றுனர், கட்டட பொறியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் 1,500 பேர் பணிபுரிகின்றனர்.
இவர்கள் தங்களின் ஊதிய தொகையை, திட்டப் பணிகளுக்கான 100 சதவீத மானியத்தில் இருந்து பெற்று வந்தனர். ஆனால் சமீபகாலமாக திட்டத்திற்காக மத்திய அரசு, மாநில அரசு பங்களிப்பு தொகை மானியம் குறைத்து வழங்கப்படுவதால், இவர்களுக்கான ஊதியமும் சொற்பமாகவே கிடைக்கிறது. இதனால், அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தங்களை பணி அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அனைவருக்கும் கல்வி திட்ட தொகுப்பூதிய பணியாளர் கூட்டமைப்பு சார்பில் அரசு, பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
சங்கத்தின் மதுரை மண்டல நிர்வாகி ராஜா கூறியதாவது:மாநிலத்தில் 1,500 பேர் வேலைவாய்ப்பு பதிவு மூப்பை இழந்து நிரந்தரமின்றி பணிபுரிந்து வருகிறோம். ஏற்கனவே நடக்கும் திட்டப்
பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. எனவே அரசு அனைவருக்கும் கல்வித்திட்ட பணியாளர்களை நிரந்தரமாக்க முன் வர வேண்டும்,' என்றார்.