மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகள் : தேர்வுக்கு குழு அமைக்க உத்தரவு.....
சிறந்த தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு சுழற்கேடயம் வழங்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், மூன்று பள்ளிகளை தேர்வு செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிறந்த பள்ளிகளை தேர்வு செய்வதற்காக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரை தலைவராகவும், அவரால் நியமனம் செய்யப்பட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலரை செயலராகவும், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் ஆகிய இருவரை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்க வேண்டும்.
சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்க, குறைந்தபட்சம் ஐந்து காரணங்களுடன், எந்தவிதமான புகாருக்கும் இடமளிக்காத வகையில், மாவட்டத்துக்கு, மூன்று பள்ளிகளை தேர்ந்தெடுத்து, பட்டியலை ஜூலை 5ம், தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். சிறந்த பள்ளிகளுக்கான தரக்குறியீடுகளின் மொத்த மதிப்பெண்ணான, 100ல் 90 மற்றும் அதற்கு மேல் மதிப்பீடு பெற்ற பள்ளிகளையே, ஆய்வுக்குழுவினர் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்ய வேண்டும்.
மேலும், ஆய்வுக்குழுவினர் ஒரு நாளில், இரண்டு அல்லது மூன்று பள்ளிகளை பார்வையிட்டு, சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.