400 மாணவ மாணவிகளின் பள்ளிக் கல்வியை மீட்டுக் கொடுத்த போலீஸ் அதிகாரி... குவியும் பாராட்டுக்கள்.....
சென்னை: 400 ஏழை மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி கிடைக்க நடவடிக்கை எடுத்த அடையார் கூடுதல் போலீஸ் கமிஷனர் சுந்தரவடிவேலுவுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சென்னையை அடுத்த கண்ணகி நகரில் உள்ள குடிசை மாற்று வாரியத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் பலர், பள்ளிக்குச் செல்லாமல், பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இதையறிந்த அடையார் கூடுதல் போலீஸ் கமிஷனர் சுந்தரவடிவேல், மாணவர்களுக்கு, முறையான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார். கல்வியின் மூலமாக, அவர்களின் குற்ற ஆர்வத்தை தடுக்கலாம் என்றும் தீர்மானித்த அவர், கண்ணகி நகர், எழில் நகர் போன்ற இடங்களில் வசிக்கும் அடிப்படை வசதியற்ற, பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவர்களின் விவரத்தை சேகரித்தார்.
இதன்படி, சுமார் 412 மாணவர்கள், பள்ளிகளில் இருந்து இடைநின்றது தெரியவந்தது. 18 வயதுக்கு மிகாமல் உள்ள இந்த மாணவர்கள் அனைவரையும் பெரும் முயற்சி எடுத்து, சக போலீஸ் அதிகாரிகளின் பங்களிப்பில் அத்தியாவசிய செலவுகளை செய்து, பள்ளியில் சேர்த்துள்ளார் சுந்தரவடிவேல்.
இந்த மாணவர்களின் எதிர்காலத்திற்கு, நல்ல வழியை காட்ட, கடந்த 8 மாதங்களாக பெரும் முயற்சி எடுத்து, தற்போது அதனை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டப் பணிக்காக, தன்னோடு உதவிக்கு நின்ற இளம் போலீஸ் அதிகாரிகள், தனியார் நிறுவனங்களுக்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.