பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி வரிசையில் பிளாஸ்டிக் சர்க்கரை!
பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி வரிசையில் தற்போது, பிளாஸ்டிக் சர்க்கரையும் சேர்ந்துவிட்டது. மக்களுக்கு இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு மேற்குவங்கம், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களிலுள்ள சந்தையில், பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வந்துள்ளதாக ஒரு செய்தி பரவியது.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், தெலுங்கானாவில் பிளாஸ்டிக் அரிசி மூட்டைகளை அந்த மாநில உணவுப்பொருள் அதிகாரிகள் பறிமுதல்செய்தனர். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒவ்வொரு மாநில அரசும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தத்தொடங்கின. தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் அரிசி பீதி கொஞ்சம் ஓய்ந்த நிலையில், பிளாஸ்டிக் சர்க்கரை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் ஒரு சில கடைகளில், பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனைக்கு வந்துள்ளதாக ஆதாரங்களுடன் சிலர் சமூகவலைதளங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இதுகுறித்து, பெங்களூரு உணவுத்துறை அமைச்சகம் இன்னும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.