TNTET - 2017:ஆசிரியர் தகுதித்தேர்வில் பழைய ‘வெயிட்டேஜ்’ முறையே கணக்கிடப்படும் | வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டும் மையம் அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
வழிகாட்டும் நிகழ்ச்சி
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளவும், என்ன படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளவும் அரசு சார்பில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை கருத்தரங்கு முகாம்கள் நடத்த திட்டமிட்டது. அதன்படி மாநகராட்சி, மாவட்ட தலைநகரங்கள், நகராட்சிகளில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் வட்டம் பொன்மார் பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஷ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரியில் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது.கலெக்டர் பொன்னையா தலைமை வகித்தார். கருத்தரங்கை அமைச்சர் செங்கோட்டையன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் கையேட்டை அவர் வெளியிட்டார்.
சுய வேலைவாய்ப்பு
அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:- இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் இது போன்ற கருத்தரங்கு நடத்துவதன் மூலம், எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் உயரும். இன்று (வெள்ளிக்கிழமை) ஊராட்சி ஒன்றியங்களில் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஏழை மாணவர்களின் அறிவுத்திறனை அறிந்து அவர்கள் எந்த துறையில் ஆர்வமாக உள்ளார்களோ அந்த துறையில் வேலைவாய்ப்பு சார்ந்த உயர்கல்வியை தொடர ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் அதனை கற்க கல்வி நிறுவனங்கள் எங்கு அமைந்து உள்ளன என்பதற்கான வழிக்காட்டு கையேடும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த கையேட்டில் கல்விஉதவித்தொகை சார்ந்த விவரங்கள், சுய வேலைவாய்ப்பு, திறன்மேம்பாடு பயிற்சி பற்றி விளக்கப்பட்டுள்ளது. வழிகாட்டும் மையம் வரும் கல்வி ஆண்டு முதல் உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டும் மையம் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்றார். இணை இயக்குநர் பி.குப்புசாமி, எம்.கோதண்டபாணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ச.ராஜேந்திரன், பிரின்ஸ் கல்விக்குழும தலைவர் கே.வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் முதன்மை கல்வி அலுவலர் உஷா நன்றி கூறினார்.
புதிய பாடத்திட்டம் முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- 'நீட்'தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்கக்கோரி சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதால் விதிவிலக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தை எப்படி அமைக்கலாம் என அரசு ஆய்வு செய்து வருகிறது. இதனை கல்வித்துறை மானியக்கோரிக்கையின் போது சட்டமன்றத்தில்அறிவிக்க உள்ளோம். 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விரைவில் அச்சிடும் பணி தொடங்கப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வில் பழைய 'வெயிட்டேஜ்'முறையே கணக்கிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.