'ஸ்மார்ட்' கார்டு பெற பாஸ்வேர்டு தேவையில்லை : உணவு வழங்கல்துறை புதிய அறிவிப்பு
தேனி: 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பெற இனி 'ஒன் டைம் பாஸ்வேர்டு' தேவையில்லை. பழைய ரேஷன் கார்டை கொண்டு சென்று பெற்றுக்கொள்ளலாம், என உணவு வழங்கல்துறை அறிவித்துள்ளது.
போலிகளை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஏப்., 1 முதல் 'ஸ்மார்ட்' கார்டு வழங்கப்பட்டு வருகிறது.அவை வட்ட வழங்கல் துறை மூலம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டது. அக் கார்டு தயாராகியுள்ள நுகர்வோரின் அலைபேசிக்கு சென்னை உணவு வழங்கல் துறையில் இருந்து 'ஒன் டைம் பாஸ்வேர்டு' அனுப்பப்படும். இந்த பாஸ்வேர்டு எண்ணை 7நாட்களுக்கு ரேஷன் கடைகளில் தெரிவித்து 'ஸ்மார்ட்கார்டு' பெற்று கொள்ளலாம், என தெரிவித்து இருந்தனர். இந்த வழிமுறைகளில் கார்டுகள் வழங்கப்பட்டன.
ஆர்வம் இல்லை. ஆனால் தயாராக உள்ள 40 சதவீத கார்டுகள் நுகர்வோருக்கு வினியோகிக்கப்பட வில்லை. இதற்கு காரணம் பதிவின் போது வழங்கிய அலைபேசி எண்களை பலர் மாற்றியுள்ளனர். அதனால் 'ஒன் டைம் பாஸ்வேர்டு' உரியவருக்கு சென்றடையவில்லை. ரேஷன் கடையில் உள்ள 'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவியில் பல இடங்களில் 'ஸ்மார்ட்' கார்டு விபரத்தை பதிவேற்றம் செய்ய இயவில்லை, என்ற புகாரும் இப்பணியில் தொய்வு ஏற்படுத்தியது.
புது 'ஆப்' உருவாக்கம் : இந்நிலையில் 'ஸ்மார்ட்' கார்டுகளை விரைவாக வழங்க உணவு வழங்கல் துறை தற்போது புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இனி 'ஒன் டைம் பாஸ்வேர்டு' அலைபேசிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. 'ஸ்மார்ட்' கார்டு வந்தவர்கள் விபரம் ரேஷன் கடை அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். அதைப்பெற கார்டுதாரர்கள் பழைய ரேஷன் கார்டை எடுத்து சென்றால் போதும். ரேஷன் கடை பணியாளர்களே 'பாயின்ட் ஆப் சேல்ஸ் கருவியில்' ஸ்மார்ட் கார்டை ஸ்கேன் செய்து அதற்காக உருவாக்கப்பட்ட புது 'ஆப்'பில் 'ஓகே' ஆனவுடன் 'ஸ்மார்ட்' கார்டு நுகர்வோருக்கு வழங்கப்படும். இந்த நடைமுறை ஒரு வாரத்தில் பயன்பாட்டிற்கு வரும், என உணவு வழங்கல் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.