>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 28 ஏப்ரல், 2017


அட்சய திருதியை என்றால் என்ன? அன்று என்ன செய்ய வேண்டும்? வணங்க வேண்டிய தெய்வங்கள்

பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.


எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர். அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர். மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப் பலகையைப் போட்டு மேலே வாழையிலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். கலசத்தின் அருகே ஒரு படி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்குப் பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். 

மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப்பக்கமாக வையுங்கள். நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருளான உப்பை வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடிவந்துவிடும். முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். 

பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள். உங்களுக்குத் தெரிந்த விஷ்ணுலட்சுமி, சிவன்பார்வதி, குபேரன், துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். குசேலரின் கதையைப் படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது. பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது. அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்குச் சென்று தரிசியுங்கள்.

அதன் பின்னர் மீண்டும் தூப தீப ஆராதனையை கலசத்துக்குச் செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள். உண்ணாவிரதம் இருப்பது, எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி, உடல்நலத்தைப் பொறுத்தது. கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம். பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காய், மற்ற பொருட்களை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அட்சய திருதியை அன்று எதுவும் வாங்கலாம்!

அட்சய திருதியை அன்று தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்றும், தங்கம் வாங்கினால் மட்டுமே தங்கும்; பெருகும் என்பதில்லை. அன்றைய தினம் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பதுதான் ஐதீகம்.சித்திரை மாதத்தின் வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை என்று சொல்லப்படுகிறது. சயம் என்றால் எடுக்க எடுக்க குறையாதது என்று பொருள். எல்லா விதமான நலன்களையும் குறைவிலாது அள்ளி அள்ளிக் கொடுக்கும் இந்த நன்னாளை அட்சய திருதியை என்று அழைக்கின்றோம்.

மகா விஷ்ணுவின் மார்பில் மகாலட்சுமி இடம் பெற்றமை, பரசுராமர், பலராமர் போன்றவர்கள் அவதரித்த நாள் போன்றன இந்த அட்சய திருதியை நாள் என்றே இதிகாசங்கள் கூறுகின்றன. வறுமையில் வாடிய குசேலன் தனது நண்பனான கிருஷ்ணனை பார்க்கச் சென்ற பொது கொண்டு சென்ற மூன்று பிடி அவலை உண்டு பதிலாக கோடி கோடியாக செல்வங்களைக் அள்ளிக்கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திருதியை நாள் என்றே கூறப்பட்டுள்ளது.

பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது உணவுக்கு அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க கண்ணன் அட்சய பாத்திரத்தை அவர்களிடம் கொடுத்ததாகவும் அவர்கள் தேவையானபோது அந்த அட்சய பாத்திரத்தின் மூலம் அள்ள அள்ளக் குறையாத உணவுப்பொருட்களைப் பெற்று புசித்ததாகவும் மகாபாரத கதையில் சொல்லப்பட்டுள்ளது.சிவபெருமான் தன் பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக் கொண்டதும், துச்சாதனன் பாஞ்சாலியின் புடவையை உருவிய பொது கண்ண பரமாத்மா அட்சய என்று கூறி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை நாள் என்றும் அதனால் அட்சய திருதியையில் எதைச் செய்தாலும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்றும் இந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, நல்ல காரியங்களுக்கு உதவுவது போன்றன அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும் எனவும் ஆன்றோர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக அன்னை லட்சுமி விளங்குகின்றாள்.அட்சய திருதியை நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. 

எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். உப்பு, அரிசி மற்றும் தேவையான ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என எதை வேண்டுமானாலும் வாங்கலாம். பெண் பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம் போன்றனவற்றை இந்தநாளில் செய்வது நல்லது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அன்னதானம் செய்யுங்கள்!

அட்சயதிரிதியை நாளில் தானம் செய்வது சிறந்தது. ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் செல்வவளம் பெருகும். பழவகைகளை அளித்தால் உயர்பதவி கிடைக்கும். வெயில் வெம்மை தீர குடை, விசிறி, காலணி வழங்கினால் இன்பவாழ்வு உண்டாகும்.ஆடை தானம் செய்ய ஆரோக்கியம் கூடும். தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வி வளர்ச்சி பெருகும். தயிர் தானம் அளித்தால் பாவவிமோசனம் உண்டாகும். 

தானியங்களை வழங்கிட விபத்து, அகாலமரணம் நேராது. அன்று, பசுவிற்கு உணவளித்தால் சகலபாவமும் நீங்கி நல்வாழ்வு உண்டாகும். அட்சய திரிதியையன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளைப் போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தைக் கொண்டு வரும் அம்சமாகும். இது சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும். சாபம் பெற்று தேய்ந்துபோன சந்திரன், அட்சய திரிதியை தினத்தன்று அட்சய வரம் பெற்று மீண்டும் அட்சய திரிதியை தினத்திலிருந்து வளரத் தொடங்கினான்.

பகீரதனின் கடுந்தவத்தால் ஆகாயத்திலிருந்து இறங்கிய கங்கை, அட்சய திரிதியை நாளில்தான் பூமியைத் தொட்டது. பாண்டவர்கள் வனவாசத்தின்போது அட்சய பாத்திரம் பெற்றதும், மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றதும் அட்சய திரிதியை நாளில்தான். திருமால் மார்பில் என்றும் நீங்காமலிருப்பதற்கான வரத்தை அட்சய திரிதியை தினத்தன்று தான் மகாலட்சுமி பெற்றாள். அட்சய திரிதியை தினத்தன்றுதான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகிலுள்ள முழையூர் பரசுநாதர் ஆலயத்தில், அட்சய திரிதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். 

அச்சமயம் சிவனை தரிசித்தால் செல்வம் பெருகுமென்பது நம்பிக்கை.அட்சய திரிதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய்ச் சேருமென்பது ஐதீகம். எனவே அன்றைய தினம் செய்யப்படும் பித்ருக் கடன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பராசக்தியின் அம்சமான சாகம்பரிதேவி இவ்வுலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. 

ஒரு அட்சய திரிதியை தினத்தன்றுதான் அவர் இவற்றை உருவாக்கினாராம்.அட்சய திரிதியை அன்று ஆல இலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபித்து கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும். அட்சய திரிதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.அன்றைய தினம் மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும். அட்சய திரிதியை தினத்தன்று சிவனே அன்னபூணியிடம் உணவு பெற்றதால், நமசிவாய மந்திரத்தை அன்று முதல் சொல்லத் தொடங்கலாம். பிறகு நாள்தோறும் 108 முறை சொல்லிவந்தால் பார்வதி பரமேஸ்வரரின் பூரண அருள் கிட்டும்.

தானம்

அட்சய திருதியை அன்று தானம், தர்மம் செய்வதால் மிகவும் புண்ணியம் கிட்டும், மேலும் அன்று பொன், பொருள், நிலம் வாங்க மிகவும் உகந்த நாளாகும்.
தானம் தர்மம் அட்சய திருதியை அன்று காலையில் துவரம் பருப்பு, மொச்சை, அரிசி ஆகிய தானியங்கள், சிவப்பு புடவை, வெள்ளை வேஷ்டி ஆகிய துணிகள் ஆகியவற்றை ஆதரவற்றோர், ஏழை விவசாயிகள், நடைபாதை வாசிகளுக்கு தானம் செய்வது மிகவும் பலன் தரும்.

கோபூஜை:

அன்று காலை பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து தானம் செய்வதால் லக்ஷ்மி அருள் கிடைக்கும்.

ஏன் தங்கம் வாங்க வேண்டும்...?

அட்சயதிரிதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம். 

அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம்.எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே. வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள்.அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். 

எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும்.அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது.

நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது.தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும். 

எதுவும் வாங்கலாம்!

அட்சய திரிதியை நாளில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது சிறப்பு. குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும், புதிதாக தொழில் தொடங்கவும், புது முயற்சிகளில் ஈடுபடவும், கட்டடப்பணி துவங்கவும் இந்நாள் உகந்ததாகும். தங்க ஆபரணங்களை அட்சய திரிதியை நாளில் விருப்பத்துடன் வாங்குவர். மஞ்சள், உப்பு, பலசரக்கு சாமான்கள்,வழிபாட்டுக்குரிய பூஜை சாமான்கள், புத்தாடை, புத்தகம், டி.வி., வாஷிங்மிஷின், ஏ.சி., போன்ற மின் சாதனங்கள், டூவீலர், கார் போன்ற வாகனங்கள், கட்டுமான பொருட்கள், இப்படி எதையும் வாங்கலாம்.

அட்சய திருதியை நாளின் சிறப்புகள்

 மஹாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராம அவதாரம் நிகழ்ந்தது அட்சய திருதியை நன்னாளில் தான். அதே போல பலராமரும் இந்த நாளில் தான் பூமியில் தோன்றினார்.பாண்டவர்கள் வனவாசம் செய்யும் போது சூரியனை வேண்டி தருமர் அட்சயப் பாத்திரத்தைப் பெற்றதும் இந்த நாளில் தான். இது தொடர்பாக ஒரு கதை புராணத்தில் காணப்படுகிறது. துரியோதனன் பாண்டவர்களை எப்படியாவது அழிக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டு தாய் மாமன் சகுனியின் யோசனைப்படி துர்வாச முனிவருக்கு மிகவும் நன்றாக பணிவிடைகள் பல செய்து அவரது நன்மதிப்பைப் பெற்றான்.

அவன் எதிர்பார்த்தது போலவே அவரும், 'வேண்டும் வரத்தைக் கேள்' எனக் கூற, அவன் "சுவாமி! நான் தங்களுக்கு உபசாரங்கள் பணிவிடைகள் செய்து பெருபேறு பெற்றேன். அதே போன்ற கானகத்தில் உள்ள என் சகோதரர்களும் இதே பாக்கியத்தைப் பெறும்படி நீங்கள் திரு மனது வைக்க வேண்டும்' என்று வேண்ட அவரும் அவ்வாறே செய்வதாகக் கூறினார்.பாண்டவர்களால் துர்வாச முனிவரைத் திருப்தி படுத்த முடியாது. அவர்கள் சாபத்துக்கு ஆளாகி துன்புறுவார்கள் என்பதே அவன் தந்திரம். அதற்கேற்றாற் போல துர்வாசர் தன் பரிவாரங்களுடன் காடு சென்றடைந்தபோது துரௌபதி உணவருந்தி முடித்து அட்சய பாத்திரத்தைக் கவிழ்த்து விட்டாள். அவ்வாறு செய்தால் அந்தப் பாத்திரம் அன்றைக்கு செயலிழந்து விடும்.

மீண்டும் மறுநாளே அன்னம் தரும். கலக்கமடைந்த பாண்டவர்கள் முனிவரை ஆற்றுக்கு நீராட அனுப்பிவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தனர். பாஞ்சாலி கண்ணனை மனதால் நினைத்துத் துதிக்க அடுத்த கணம் அவள் முன் தோன்றினான் பக்த வத்சலன். தங்களுடைய இக்கட்டான நிலையைக் கூறினார்கள் பாண்டவர்கள்.கொஞ்சம் கூட சஞ்சலப் படாமல் அந்தப் பாத்திரத்தை எடுத்து வரும்படி பணித்தார் பெருமாள். அவ்வாறே கொண்டு வரப்பட்டது.

அதில் ஒரே ஒரு பருக்கை சாதமும், கொஞ்சம் கீரையும் ஒட்டி இருந்தன. அவற்றை எடுத்து வாயில் போட்ட அச்சுதன், வயிற்றைத் தடவிக்கொண்டு "அட்சய அஸ்து' என்றான். உடனே நதியில் நீராடிக் கொண்டிருந்த முனிவருக்கும் அவர் சீடர்களுக்கும் திரௌபதி உணவிட்டு வயிறு நிறைய உண்டது போன்ற திருப்தி ஏற்பட்டது.அவர்களால் இனி அன்னத்தை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது என்ற நிலை. அதனால் அவர்கள் பாண்டவர்கள் இருக்குமிடத்துக்கு வராமலேயே சென்று விட்டனர். இவ்வாறு பரந்தாமன் பாண்டவர்களைக் காத்த தினமும் இந்த அட்சய திருதியை தினம் தான்.

வழிபாட்டு அமைப்பு:

அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.

அட்சய திருதியை பூஜை!

உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் குண்டாக இருப்பவர்களுக்கு அட்சய திருதியை பூஜை சிறப்பு. ஸ்ரீ சனீஸ்வரர் மானுட ரூபத்தில் விளங்குளத்தில் அட்சய திருதியை அன்று பிட்சை ஏற்று. அன்னதானம் அளித்துத் தனக்கு ஏற்பட்ட ஊனக் குற்றங்களைப் போக்கிக் கொண்டார். எனவே, உடல் ஊனமுற்றவர்கள், மிகவும் குண்டாக இருப்பவர்கள் திருதியைத் திதி நாட்களில், ஸ்ரீ சனீஸ்வரருக்கு நவதானியங்களும் ஏனைய பருப்பு வகைகளும் பதித்த சந்தன அட்சயக் காப்பும் சார்த்தி முழு முந்திரி பாதாம் பருப்புகளால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் உடல் வகைத் துன்பங்கள் தணியும். வழிபாட்டிற்குப் பிறகு தான்யங்களையும் முந்திரிகளையும் தானமாக ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்.

லட்சுமி கடாட்சம் வரும்!

பொதுவாக தானியங்களில் தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள். அதனால் தான் திருமணம் முடிந்த நங்கைகள், முதன் முதலாக மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லும் போது, மரக்காவில் பொன்னி அரிசி போட்டு அதன் மீது காமாட்சி விளக்கேற்றி, அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வரச் சொல்வர்.அட்சய திருதியை அன்றைக்கு, முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது. கைக்குத்தல் அரிசிதான் முனை முறியாத அரிசி. அந்த முனை முறியாத அரிசியை புடைத்து எடுத்து, பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது.அதற்கடுத்து மஞ்சளில், எல்லா மகிமையும் உள்ளது. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம், மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம். இதில், கஸ்தூரி மஞ்சளுக்கு தனி சக்தி உள்ளது. தங்கம் என்பது லட்சுமியின் ஒரு அம்சம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளியும் வாங்கலாம்.

என்ன தானம் செய்யலாம்?

  • அஸ்வினி: கதம்ப சாதம் தானம். ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.
  • பரணி: நெய் சாதம் தானம், ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
  • கிருத்திகை: சர்க்கரைப் பொங்கல் தானம்; பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம். 
  • ரோகிணி: பால் அல்லது பால் பாயசம் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம். 
  • மிருகசீரிஷம்: சாம்பார் சாதம் தானம், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம். 
  • திருவாதிரை: தயிர் சாதம் தானம்; ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவலாம். 
  • புனர்பூசம்: தயிர் சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம். 
  • பூசம்: மிளகு கலந்த சாதம் தானம்; கால்நடைகளுக்கு எள்ளுப்புண்ணாக்கு கொடுக்கலாம்.
  • ஆயில்யம்: வெண்பொங்கல் தானம்; பசுமாட்டுக்கு பச்சைப்பயிறைக் கொடுக்கலாம். 
  • மகம்: கதம்ப சாதம் தானம்; கால்நடைகளுக்கு கொள்ளு தானியம் கொடுக்கலாம்.
  • பூரம்: நெய் சாதம்; மன நோயாளிகளுக்கு உதவலாம்.
  • உத்திரம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; கால்நடைகளுக்கு கோதுமை அளிக்கலாம். 
  • அஸ்தம்: பால் பாயசம் தானம்; மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம். 
  • சித்திரை: துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்; விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
  • சுவாதி: உளுந்து வடை தானம்; வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கித் தரலாம்.
  • விசாகம்: தயிர்சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம். 
  • அனுஷம்: மிளகு கலந்த சாதம்;வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு சாதம் கொடுக்கலாம். 
  • கேட்டை: வெண்பொங்கல் தானம்; பசு மாட்டுக்கு பச்சைப்பயிறு கொடுக்கலாம். 
  • மூலம்: கதம்ப சாதம் தானம்; ஏழைகளுக்கு உதவலாம். 
  • பூராடம்: நெய் சாதம் தானம்; ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.
  • உத்திராடம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம். 
  • திருவோணம்: சர்க்கரை கலந்த பால் தானம்; வறுமையிலிருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.
  • அவிட்டம்: சாம்பார் சாதம் தானம்; கால்நடைகளுக்கு துவரை வாங்கித் தரலாம்.
  • சதயம்: உளுந்துப் பொடி சாதம் தானம்; கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் தரலாம்.
  • பூரட்டாதி: தயிர் சாதம் தானம்; பிறருக்கு இயன்ற உதவி செய்யலாம்.
  • உத்திரட்டாதி: மிளகு சாதம் தானம்; ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது. 
  • ரேவதி: வெண் பொங்கல் பிரசாதம் தானம் நல்லது. பறவைகள், விலங்குகளுக்கு உணவளிக்கலாம்.

அன்னபூரணி தீர்த்த உணவு பஞ்சம்:

ஒரு முறை காசியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் வறுமையில் வாடினர். உண்பதற்கு வழியில்லாமல் பல உயிர்கள் செத்து மடிந்தன. பிரம்ம கபாலத்தை நிரப்பினால்தான் அந்தப் பஞ்சம் தீரும் என்பதால், சிவன் பிரம்ம கபாலத்தை எந்தியவராய் பிட்ஷாடன மூர்த்தியாய் திரிந்து கொண்டிருந்தார். அவரது கையிலிருந்த கபாலம் (திருவோடு) யார் வந்து என்ன பிட்சையிட்டாலும் நிரம்பவேயில்லை. அப்போது பார்வதிதேவி, அன்னபூரணியாக அவதாரம் எடுத்தாள். 

தன்னுடைய அட்சயப் பாத்திரத்திலிருந்து அள்ள அள்ளக் குறையாமல் அனைவருக்கும் அன்னத்தை வாரி வழங்கி அனைவரின் பசிப்பிணி தீர்த்தாள்.சிவனார் எந்தியிருந்த பிரும்ம கபாலம் நிரம்பும் அளவுக்கு அதில் உணவினை இட்டாள். அதன் பிறகே அது இறைவனின் திருக்கரத்தில் இருந்து நீங்கியது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னபூரணி தேவி அவதரித்ததும் அட்சய திருதியை நாளில்தான். வியாச மஹரிஷி சொல்லச் சொல்ல பிள்ளையார் மஹாபாரதம் எழுதத் துவங்கியதும் இந்த நாளில்தான். குபேரன், மஹாலட்சுமியைத் துதித்து என்றும் வற்றாத செல்வம் நிறைந்த சங்க நிதியையும், பதும நிதியையும் பெற்றதும் அட்சய திருதியை நாளில்தான். புண்ணிய நதியான கங்கை நதி வானத்திலிருந்து பாரத மண்ணுக்கு வந்ததும் இந்த நாளில்தான்.வட மாநிலங்களில் அட்சயதிருதியை நாளை அலா தீஜ் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். 

அன்று புதிதாக தொழில் ஆரம்பிக்கவும், உழவுத் தொழிலைத் தொடங்கவும், முன்னோர்கள் பித்ருக்கள் காரியங்கள் செய்யவும் ஏற்ற நாளாக இந்த நாளைக் கருதுகிறார்கள்.எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் அட்ச திருதியை நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த நாளில் புதியது தொடங்குதல், நீத்தோர் வழிபாடு செய்தல் ஆகியவற்றைச் செய்வது நன்மை பயக்கும். 

திருமகளின் அருள் அட்சயமாக நம் மனைகளில் நிறைந்திருக்க அட்சய திருதியை அன்று லட்சுமி வழிபாடு செய்தும் தயிர் சாதம், புதிய வஸ்திரம் முதலியவை தானம் அளித்தும் தெய்வங்களை வழிபடுங்கள். எளிமையானதும், ஏற்றம் தருவதுமான அட்சய திருதியை விரதத்தை அவசியம் கடைப்பிடித்து இயன்ற பொருளை தானம் செய்து திருமகள் அருளால், அளவற்ற செல்வம் பெற்று ஆனந்தமாக வாழ்வோம்.

அட்சய திருதியை அன்று வெண்மைக்கு சிறப்பு

அட்சய திருதியை அன்று எதைச் செய்யத் தொடஙகினாலும் அது குறையாமல், மேலும் மேலும் வளரும் என்பது ஐதிகம்.இந்த நாளில்தான் திரேதா யுகம் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. எனினும் ஒரு குறிப்பிட்ட நாளில் தான் இது தோன்றியது என்று வரையறுத்துக் கூற முடியாது.யுகம் யுகமாக இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. அட்சய திருதியை தினத்தில் தானம் செய்வதும், தங்கம் முதலியன வாங்குவதும் கிருஷ்ணர் காலத்தில் இருந்தே தொடங்கியது என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. 

அட்சய திருதியை நாளில் விலை உயர்ந்த பொருட்களான தங்கம், வெள்ளிதான் வாங்க வேண்டும் என்பதில்லை. வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளும் வாங்கலாம். குறிப்பாக வெண்மை நிறமாக இருந்தால் மிகவும் சிறப்பு. அட்சய திருதியை அன்று நாம் செய்யும் தானத்தின் பலன் கோடிப் பசுக்களை தானம் செய்ததற்கு ஒப்பானது என்று பாகவத புராணம் பேசுகிறது. அதனால் அந்த நாளில் நம்மால் இயன்ற அளவு தானம் செய்யலாம்.

வணங்க வேண்டிய தெய்வங்கள்

  • அஸ்வினி, மகம், மூலம்: விநாயகர்
  • பரணி, பூரம், பூராடம்: ரங்கநாதர்
  • ரோகிணி, அஸ்தம், திருவோணம்: சிவன்
  • மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்: துர்க்கை
  • திருவாதிரை, சுவாதி, சதயம்: பைரவர்
  • புனர்பூசம், விசாகம், பூராட்டாதி: ராகவேந்திரர்
  • பூசம், அனுஷம், உத்திரட்டாதி: சிவன்
  • ஆயில்யம், கேட்டை, ரேவதி: பெருமாள்
  • உத்திரம், உத்திராடம், கார்த்திகை: முருகன்

  Thanks:www.asiriyar.com