தமிழக அரசு மீண்டும்... ஸ்தம்பிப்பு!: 5 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
ஆளும் கட்சிக்குள் நிலவும் குழப்பம் காரணமாக, ஏற்கனவே தள்ளாடி வரும் தமிழக அரசு நிர்வாகம், ஐந்து லட்சம் அரசு ஊழியர்களின், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால், மீண்டும் ஸ்தம்பித்துள்ளது. கொளுத்தும் கோடையில், அரசு பணிகள் நடைபெறாததால், தத்தளிக்கும் மக்களுக்கு, அடி மேல் அடி விழும் வகையில், அரசு ஊழியர்கள் போராட்டம் மைந்துள்ளது.
பன்னீர்செல்வம் பதவி விலகலுக்கு பின் புதிய முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார். சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சி நிர்வாகம் இருப்பதால் அவரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அதனால் அரசுப் பணிகள் முடங்கின.மார்ச் துவக்கத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் அனைவரும், தினகரனுக்காக தேர்தல் பணியாற்ற சென்று விட்டனர். அப்போதும், அரசு நிர்வாகம் முடங்கியது.அந்த இடைத்தேர்தல் ரத்தான பின் ஆட்சி பணிகளில் அமைச்சர்கள் கவனம் செலுத்துவர் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அமைச்சர் வீட்டில் சோதனை, தேர்தல் கமிஷனுக்கு, லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம், பிளவுபட்ட கட்சியை இணைக்கும் பேச்சில் விழுந்த முட்டுக்கட்டை என, அடுத்தடுத்து பிரச்னைகள் வெடித்து வருகின்றன.இவற்றை கவனிப்பதற்கே, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நேரம் சரியாக உள்ளது. இதன் காரணமாக, அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது; திட்டப் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன.தமிழக பட்ஜெட் தாக்கல் செய்து, ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில், துறைகள் ரீதியான நிதி ஒதுக்கீட்டுக்கான, மானிய கோரிக்கை விவாதம், சட்டசபையில் நடத்தப்பட வேண்டும்.
அதற்காக சட்டசபை தொடர் எப்போது துவங்கும் என்பது, முடிவு செய்யப்படாமல் உள்ளது.பல மாதங்களாக, முதியோர் உதவித் தொகை வழங்கப் படாமல் உள்ளது. குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது. அரசு நிர்வாகம் செயல் படாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.இத்தகைய சூழலில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும் வரை, 2016 ஜன., முதல் தேதி முதல், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.இவை உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள், நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் உட்பட, 60க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த, ஐந்து லட்சம் ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக, எட்டு மாதங்களாக, தள்ளாடி வரும், தமிழக அரசு நிர்வாகம் மீண்டும் ஸ்தம்பித்துள்ளது. கொளுத்தும் கோடையில், குடிநீர் பஞ்சம் வாட்டுகிறது. அதற்கான எந்த நிவாரண பணிகளும், அரசு தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை. தத்தளிக்கும் மக்களுக்கு, அடி மேல் அடி விழும் வகையில், அரசு ஊழியர்களும், போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, அரசு ஊழியர் சங்கங்களுடன், நேற்று வரை அரசு தரப்பில், முறையாக பேச்சு நடைபெறவில்லை.
முதல்வர் மற்றும் அமைச்சர்கள், கட்சியை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதால், இவர்கள் பிரச்னையை யார் கவனிப்பர் என்பதும் தெரியவில்லை.இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களுடன், பேச்சு நடத்த, அதிகாரிகளும் ஆர்வம் காட்டவில்லை. எனவே, போராட்டத்தை தீவிரப்படுத்த சங்கங்கள் முடிவு செய்துள்ளன.இதுகுறித்து, அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர், தமிழ்செல்வி கூறியதாவது:எங்கள் கோரிக்கைகளில் பெரும்பாலானவை, சட்டசபையில், ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டவை. அதை கூட, அரசு செய்து தர மறுக்கிறது. 15 மாதங்களாக கேட்டும் பலன் இல்லாததால், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
அமைச்சர்கள், சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்