போராட்டத்தை தீவிரப்படுத்த அரசு ஊழியர்கள் முடிவு
மதுரை: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற போராட்டத்தை அரசு ஊழியர்கள் நேற்று துவக்கினர்.
அமைச்சர் உத்தரவிட்டும், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால், போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இருபது சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம், தினக்கூலி ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் போன்ற 20 கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 61 துறைகளை சேர்ந்தவர்கள், இதில் பங்கேற்றுள்ளனர். இதற்கிடையில், ஒவ்வொரு துறை வாரியான சங்க மாநில தலைவர்கள் இன்று (ஏப்., 26) சென்னையில் கூடி, போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து முடிவு செய்கின்றனர்.
இதுகுறித்து ஊழியர் சங்க, மாநில துணை தலைவர் செல்வம் கூறியதாவது: ஊழியர் சங்க வேலைநிறுத்தம் குறித்து அறிந்த அமைச்சர் ஒருவர், பேச்சுவார்த்தை நடத்த தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அரசு ஊழியர்களும் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். ஆனால் உயரதிகாரிகள், ஆர்வம் காட்டவில்லை. எனவே வேலை நிறுத்த போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.
அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாததால் பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகின்றன. அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது, என்றார்.