இன்று லீவ், வார விடுப்பு கிடையாது : பஸ் ஊழியர்களுக்கு அரசு உத்தரவு
சென்னை: 'விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று, 'பந்த்' நடக்கும் நிலையில், பஸ் ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும்' என, அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு கோரி, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதற்கு, அரசு போக்குவரத்து சங்கங்களும், ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், 'போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்படும்' என, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று அறிவித்தார்.
இதையடுத்து, அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும், அரசு நேற்று அனுப்பிய
சுற்றறிக்கை: பொதுமக்களுக்கான சேவையில் தொடர்ந்து ஈடுபடும் வகையில், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவரும், இன்று கண்டிப்பாக பணிக்கு ஆஜராக வேண்டும். 'பந்த்'தில், தொழிலாளர்கள் ஈடுபடக்கூடாது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பு, வார விடுப்பு, பணி ஓய்வு போன்றவை உடனே ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'பந்த்'துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தொழிற்சங்கத்தினர் கூறுகையில், 'அரசு போக்குவரத்து கழகத்தில், தினக்கூலி, சேமநல பணியாளர்கள், 20 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் மூலம் பஸ்களை இயக்க, அரசு முயற்சிக்கிறது' என்றனர்.a