ரயில் பயணத்துக்கு உதவும் மெகா 'ஆப்' ஜூனில் அறிமுகம்.
ரயில் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள உதவும், மெகா, 'ஆப்' வரும் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.இது குறித்து, ரயில்வே வாரிய உறுப்பினர் முகம்மது ஜம்ஷெத், டில்லியில் நேற்று கூறியதாவது:
தற்போது பயன்பாட்டில் உள்ள, ரயில்வேயின் அனைத்து, 'ஆப்'களையும் உள்ளடக்கி, மெகா, 'ஆப்' ஒன்றை, ரயில்வே துறை உருவாக்கி வருகிறது. 'ஹைண்ட்ரயில்' எனப் பெயரிட திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆப் மூலம், ரயில்வே தொடர்பானஅனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.
ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம், அதில் ஏற்படக்கூடிய தாமதம், ரயில் டிக்கெட் ரத்து, நடைமேடை எண், குறிப்பிட்ட ஒரு ரயிலின் தற்போதைய நிலை, ரயிலில், துாங்கும் வசதி இருக்கைக்கு வாய்ப்பு உள்ளதா, உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், இந்த ஆப் அளிக்கும்.டாக்சி சேவையை பதிவு செய்தல், போர்டர் சேவை,ஓய்வு அறை, ஓட்டல், சுற்றுலா பேக்கேஜ், இ - கேட்டரிங் போன்ற, சுற்றுலா தொடர்பான சேவைகளை, புதிய ஆப் மூலம் பெற முடியும். இந்த ஆப் மூலம், சேவை வழங்கும் நிறுவனங்களுடன், அதில் கிடைக்கும் வருவாயை, ரயில்வே பகிர்ந்து கொள்ளும்.
இதனால், ஆண்டுதோறும், ரயில்வேக்கு, 100 கோடி ரூபாய்வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.ரயில்கள் தாமதமாக வருவது பற்றி, பயணிகளுக்கு தகவல் கிடைக்காமை உள்ளிட்ட பல காரணங்களால், ரயில்வே துறைக்கு, பயணிகளிடம் இருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன. அதுபோன்ற குறைபாடுகள், புதிய ஆப் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.இந்த புதிய ஆப், வரும் ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.