ஆசிரியர் தகுதித்தேர்வில் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு: கல்வித்தரம் குறையும் என குற்றச்சாட்டு.
அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் களுக்கு தகுதித்தேர்வு அவசியம் இல்லை என்ற முடிவால் கல்வித்தரம் குறையும் என பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2010-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2010-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.
தமிழகத்தில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. 2014-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 29-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 30-ம் தேதியும் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது.அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணியில் சேர தகுதித் தேர்வு அவசியம் இல்லை என்ற நீதிமன்றத்தின் ஆணையை பள்ளிக் கல்வி இயக்குனரகம் சுட்டிக்காட்டி, அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விலக்களித்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள தெளிவுரையில், சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் (பணி நிரந்தரம் ஆகாதவர்கள்) ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் எழாது அதை நிர்பந்திக்கவும் முடியாது. மேலும், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வுக்கு பதிலாக, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமாக கோடை விடுமுறை நாட்களில் புத்துணர்வு பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணியில் (பணி நிரந்தரம் ஆகாதவர் கள்) இருப்பவர்கள் தற்போது நடைபெறவுள்ள தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவிட்டால் பணியில் இருந்து நீக்கப்படுவர் என்றும் அறிவித்துள்ளது. இந்த உத்தரவால் சிறுபான்மை பள்ளிகளின் கல்வித் தரம் குறைந்துவிடும் என்று பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் சிலர் கூறியதாவது:தமிழகத்தில் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்றோர் நடத்தும் அரசு உதவி பெறும் சில பள்ளிகள் அரசு விதிகளுக்கு மாறாக கட்டணம் வசூலிப்பது, தரமற்ற ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர். இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்களின் தரத்தை உறுதி செய்யும் கடமை பள்ளிக் கல்வித்துறைக்கு உள்ளது.ஆனால், வழக்குகளில் மேல் முறையீடு ஏதும் செய்யாமல், சிறுபான்மை பள்ளி ஆசிரியர் களுக்கு தகுதித் தேர்வு அவசியம் இல்லை எனக்கூறுவதை மாணவர்களின் கல்வித்தரத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, “சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற அறிவிப்பு, ஆசிரியர் நியமனங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வி இயக்குனரகம் தெளிவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்” என்றனர்.
இதனிடையே, அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் 1000-க்கும் மேற்பட்டோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதித்தேர்வு இன்றி அவர்களைபணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.