நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் ஆதாரில் இன்று முதல் திருத்தம் செய்யலாம் : தமிழக அரசு அறிவிப்பு
சென்னை : தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் 303 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.
ஏற்கனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி இன்று (ஏப்ரல் 17) முதல் வழங்கப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் கைரேகை அல்லது கருவிழியினை பதிவு செய்து தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், புகைப்படம், கைவிரல் ரேகை, மற்றும் கருவிழி ஆகியவற்றையும் புதுப்பித்து கொள்ளலாம்.
ஆதார் அட்டையை பதிவு செய்யவும், 5 முதல் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கை விரல் ரேகை மறு பதிவு செய்வதற்கு கட்டணம் இல்லை. அதே நேரத்தில் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட நிலைப்புள்ளி விவரங்களை திருத்தம் செய்வதற்கும் மற்றும் புகைப்படம், கை விரல் ரேகை, கருவிழி புதுப்பிக்க ரூ.25 சேவை கட்டணமாகவும், ஆதார் விவரங்களை தாளில் அச்சிட்டு பெற்று கொள்வதற்கு ₹10ம் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இது தொடர்பாக 18004252911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.