தினமலர் செய்தி எதிரொலி : பிளஸ் 2 தேர்வில் போனஸ் மதிப்பெண்
நமது நாளிதழ் செய்தியை அடுத்து, பிளஸ் 2 விலங்கியல் தேர்வில், மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 2ல் துவங்கி, 31ல் முடிந்தது. இறுதி நாளில் கணிதம், அறிவியல் இணைந்த பிரிவு மாணவர்களுக்கு, உயிரியல் தேர்வு நடந்தது. அதில், விலங்கியலில், 75 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெற்றிருந்தன.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரு வகையான வினாத்தாள்களில், 'ஏ' வகை வினாத்தாளில், 14ம் எண் மற்றும், 'பி' வகையில், 16ம் எண் கேள்விகளுக்கு, சரியான விடையை தேர்வு செய்வதில், மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. 'பிறந்த குழந்தையின் உடல் எடையில், எத்தனை சதவீதம் நீர் இருக்கும்' என, கேள்வி இருந்தது. இதற்கு, 85 முதல், 90 சதவீதம் என்பது சரியான விடை. ஆனால், வினாத்தாளில் இருந்த நான்கு விடைக்குறிப்புகளில், இந்த விடை இல்லை. எனவே, இந்தக் கேள்விக்கு போனஸ் மதிப்பெண் வழங்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலை யில், நேற்று முன்தினம் விடை திருத்தம் பணி துவங்கியது. அப்போது, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விடை தொகுப்பில், 'வினாத்தாளில் இடம் பெற்ற விடைகளில், 80 முதல், 90 சதவீதம் என்பதையோ அல்லது விடைக்குறிப்பில் இல்லாத, 85 முதல், 90 சதவீதம் என்ற சரியான விடையை, மாணவர்கள் சிந்தித்து எழுதியிருந்தாலும், மதிப்பெண் அளிக்கலாம்' என, கூறப்பட்டுள்ளது.