பட்ஜெட் முக்கிய அம்சங்கள்...
புதுடில்லி: வரும், 2017 - 18 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், சாமானிய மக்களுக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில், 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கான வரி, பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கிராம கட்டமைப்பு, விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில், விவசாயக் கடனுக்கான ஒதுக்கீடு உயர்வு, மூத்த குடிமக்களின் மருத்துவத்துக்கு, 'ஸ்மார்ட் கார்டு' என, ஏழை, எளிய, சாதாரண மக்களுக்கான பட்ஜெட்டாக, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது.
ஊழலை ஒழிக்கும் வகையில், அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைக்கு கடிவாளத்தை போட்டுள்ள இந்த பட்ஜெட்டில், குற்றவாளிகள் வெளிநாடு தப்பினால், சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிரடி அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.
முதல் ஒருங்கிணைந்த பட்ஜெட்
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின் வெளியாகும் முதல் பட்ஜெட் என்பதால், மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பட்ஜெட், வழக்கமான, பிப்., 28க்கு பதிலாக முன்னதாகவே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என, பல்வேறு வகைகளில், இந்த பட்ஜெட் வரலாற்றில் இடம் பெறுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்த பின், அதன், நான்காவது பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார்.
ரயில்வேக்கு என, தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. மற்ற துறைகளைப் போல ரயில்வேக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால், வழக்கமான புதிய ரயில்கள் போன்ற அறிவிப்புகள் இடம்பெறவில்லை.
பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
வரும், 2017 - 18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
* வருமான வரி வரம்பில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரத்தில், 2.5 லட்சம் ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய் வரையிலான வரம்புக்கான வரி விகிதம், 10 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது
* 50 லட்சம் ரூபாய் முதல், ஒரு கோடி ரூபாய் வரையிலான வரம்புக்கு, 10 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும்
* ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்டவருமானத்திற்கு, 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும்
* ஐந்து லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ளவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் விண்ணப்பம், ஒரு பக்கமாக குறைக்கப்படும்
* அனைத்து பரிவர்த்தனைக்கும், மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பயன்படுத்த தடை
* மூத்த குடிமக்களுக்கு, ஆதார் அடிப்படையிலான சுகாதார அட்டை வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு, ஆண்டுக்கு, 8 சதவீதம் உறுதியான வருவாய் கிடைக்கும்
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு, 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது
* வரும் நிதியாண்டில், 10 லட்சம் கோடி ரூபாய் வேளாண் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது
* பயிர் காப்பீட்டு திட்டம், மேலும், 40 சதவீத நிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதற்கான ஒதுக்கீடு, 1.41 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது
* பாசன திட்ட நிதி தொகுப்பு, இரட்டிப்பாக்கப்பட்டு, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது
* வாங்கக் கூடிய விலையிலான வீடுகளுக்கு, அடிப்படை கட்டமைப்பு அந்தஸ்து அளிக்கப்படுகிறது
* வீடில்லாத, ஒரு கோடி பேருக்கு, 2019க்குள் சொந்த வீடு
* வரும், 2018, மே மாதத்திற்குள், 100 சதவீத கிராமங்களுக்கு மின்சார வசதி
* அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடு, 3.96 லட்சம் கோடிரூபாயாக இருக்கும்
* அரசியல் கட்சிகள், 2,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை பெறுவதற்கு தடை
* அரசியல் கட்சிகள், செக், மின்னணு முறைகள், ரிசர்வ் வங்கி வெளியிடும் தேர்தல் பாண்டுகள் மூலம், நன்கொடைகளை பெறலாம்
* பொருளாதார குற்றம் செய்துவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி செல்பவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்
* மோசடி, 'டிபாசிட்' திட்டங்கள் பிரச்னையை தடுக்கும் வகையில், மசோதா கொண்டு வரப்படும்
* பணமில்லாமல் செக் திரும்பும் வழக்குகளை எதிர்கொள்ளும் வகையில், செலாவணி சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்
* சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கான உற்பத்தி வரி உயர்த்தப்படுகிறது.
'எக்சலன்ட்' பட்ஜெட்:பிரதமர் மோடி பாராட்டு
'நிதியமைச்சர் அருண் ஜெட்லி மிகச்சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்,'' என, பிரதமர், நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.மத்திய பட்ஜெட் குறித்து, பிரதமர் மோடி கூறியதாவது:கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில், பழைய, 500 - 1,000 ரூபாய் செல்லாது என அறிவித்தோம்; அதற்கு ஊக்கம் தரும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டு வரும் பல மாற்றங்களை பட்ஜெட் உணர்த்துகிறது. விவசாயிகள், கிராம மக்கள், பெண்கள் பலன் பெறும் வகையில் பட்ஜெட் உள்ளது; விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
முதன்முறையாக, ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது; போக்குவரத்து துறையின் வளர்ச்சி பட்ஜெட்டில் எதிரொலிக்கிறது. ரயில்வே பாதுகாப்பு நிதி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது, சிறந்த நடவடிக்கை. சர்வதேச தரத்திற்கு நிகராக, தங்கள் தொழில்களை உயர்த்த, வர்த்தகர்களுக்கு வாய்ப்பு ஏற்படும். இந்த பட்ஜெட் மூலம், சிறு வர்த்தகர்கள், உடனடியாக பலன் பெறுவர்; வீடு கட்டுமான துறை வளர்ச்சியடையும். இவ்வாறு அவர் கூறினார்.