சசிகலா 4 ஆண்டுகளுக்கு முன்பே சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்பு?
அதிமுக பொதுச் செயலர் சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும், சிறையில் 4 ஆண்டுகள் முழுவதுமாக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதற்கு முன்பாகவே இவர்கள் விடுதலையாக ஒரே ஒரு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, சிறைச்சாலைக்குள் இவர்கள் சிறை அதிகாரிகள் கொடுக்கும் ஏதேனும் ஒரு கைத்தொழிலை செய்தால், இவர்களது சிறைத் தண்டனை காலம் குறைக்கப்படும் என்பது ஒன்றே அந்த வாய்ப்பு.
அதாவது, சிறைக் கைதிகளின் நன்னடத்தைக்கு ஒவ்வொரு மாதமும் 6 நாட்கள் சலுகை அளிக்கும் அதிகாரம் சிறை அதிகாரிகளுக்கு உள்ளது. இது தவிர, நன்னடைத்தைக்காக ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 20 நாட்களுக்கு சிறப்பு சிறை நேரம் என்ற ஒன்றும் வழங்கப்படும்.
இதன் அடிப்படையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் ஏதேனும் ஒரு கைவேலை செய்யும்பட்சத்தில், இவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையில் அதாவது 47 மாதங்களில் மூன்றில் ஒரு பங்கு காலத்தை மட்டும் சிறையில் கழித்தால் போதும் என்கிறது சட்டம்.
இதே குற்றத்துக்காக பெங்களூரு தனி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட போது, சசிகலா ஏற்கனவே 35 நாட்களும், இளவரசியும், சுதாகரனும் தலா 22 நாட்களும் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டனர். தற்போது அதே தண்டனைக் காலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 ஆண்டுகள், 10 கோடி அபராதம்.
சிறையில் கைவேலை செய்வதற்கு, சிறைக் கைதிகள் சிறைத் துறை கண்காணிப்பாளரிடம், தாங்கள் வேலை செய்ய தயாராக இருப்பதாக கோரிக்கை மனு அளிக்க வேண்டும். அந்த மனு மருத்துவ அதிகாரியிடம் போகும். அவர் ஒப்புதல் அளித்தால், எந்த வேலை செய்ய விருப்பம் தெரிவிக்கிறார்களோ, அதற்கான முதற்கட்ட பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு வேலை செய்வதன் மூலமும், சிறையில் நன்னடத்தையோடு இருப்பதன் மூலமும், ஒவ்வொரு மாதமும் 6 நாட்கள் விலக்குப் பெறலாம். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 72 நாட்கள் சலுகை பெற்று முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்பு உள்ளது.
இது தவிர, சிறையில் தூய்மை, சமையல், நோயால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளை கவனித்தல் போன்ற வேலைகளை செய்யும் சிறைக் கைதிகளுக்கு மாதத்துக்கு 7 நாட்கள் சலுகை கிடைக்கும் என்று சிறைத் துறை முன்னாள் டிஐஜி ஜெயசிம்ஹா கூறியுள்ளார். ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒரு முறை இந்த நாட்கள் கணக்கிடப்பட்டு விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.