அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் 34 நகரங்களுக்கு பயணம்
புதுடில்லி: நாடு முழுவதும், 34 முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக செல்லக் கூடிய, அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணத்தை, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு துவக்கி வைத்தார்.
அறிவியல் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 16 பெட்டிகள் அடங்கிய, அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில், 2007 முதல், ஒவ்வொரு ஆண்டும் இயக்கப்படுகிறது.இந்த ஆண்டு, வடகிழக்கு மாநிலமான, திரிபுராவின் அகர்தலா உட்பட, 34 முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக, இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ஆண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், இந்த ரயில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. டில்லியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த ரயிலை, கொடியசைத்து துவக்கி வைத்த, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இதில், ஒருவரை ஒருவர் குறை கூறாமல், சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளே, தற்போதைய தேவை. இதை அனைவரும் இணைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அனில் மாதவ் தவே, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர், நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.