ஜியோ ஸ்மார்ட் மூவி டவுன்லோடு வசதி அறிமுகம்: இனி இரவிலும் தரவிறக்கம் செய்யலாம்
ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் செயலிகளில் ஜியோசினிமா செயலியில் புதிய அப்டேட் மூலம் சில வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் படி வாடிக்கையாளர்கள் ஜியோ ஹேப்பி ஹவரில் திரைப்படங்களை டவுன்லோடு செய்யலாம்
ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் துவங்கப்பட்டதில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அதன் செயலிகளை பயன்படுத்தும் வசதியும் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜியோ சினிமா எனும் ஆப் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு மொழிகளை சேர்ந்த திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க வழி செய்கிறது. ஆன்லைனில் பார்ப்பதோடு மட்டுமின்றி அவற்றை டவுன்லோடு செய்யும் வசதியும் சில திரைப்படங்களில் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் ஜியோ சினிமா செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் டவுன்லோடு வசதி வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஜியோ ஹேப்பி ஹவர் நேரத்தில் திரைப்படங்களை டவுன்லோடு செய்யலாம். ஜியோ ஹேப்பி ஹவர் அதிகாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆகும்.
ஜியோசினிமாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. முன்னதாக இவற்றில் இருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட சில திரைப்படங்களை டவுன்லோடு செய்ய முடியும். இம்முறை புதிய அப்டேட் மூலம் திரைப்படங்களை ஸ்மார்ட் டவுன்லோடு மூலம் இரவு உறங்கும் முன் டவுன்லோடு நேரத்தை செட் செய்து காலை எழுந்ததும் டவுன்லோடு ஆன திரைப்படத்தை பார்க்க முடியும்.
புதிய வசதியின் மூலம் திரைப்படங்களை பார்க்க ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான திரைப்படத்தை தேர்வு செய்து டவுன்லோடு பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு கிளிக் செய்ததும் உடனடி டவுன்லோடு மற்றும் ஸ்மார்ட் டவுன்லோடு என இரண்டு ஆப்ஷன்கள் திரையில் தெரியும். இதில் ஸ்மார்ட் டவுன்லோடு ஆப்ஷனை தேர்வு செய்தால் திரைப்படம் தேர்வு செய்யப்பட்ட நேரத்தில் டவுன்லோடு ஆகும்.
இத்துடன் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் திரைப்படத்தை தங்களுக்குத் தேவையான தரத்தில் டவுன்லோடு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.