என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்களின் குறைகளை தீர்க்க ஆன்லைன் வசதி விரைவில் உருவாக்க ஏ.ஐ.சி.டி.இ. அறிவுறுத்தல்
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்ததை தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தால் ஒருநபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா கடந்த ஆண்டு தற்கொலை செய்ததை தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தால் ஒருநபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாணவர்களின் புகார் மற்றும் குறைகளை களைவதற்கான வழிமுறையை கல்லூரிகளில் உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்தது.
இதைத்தொடர்ந்து என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் குறைகளை தீர்ப்பதற்கான வழிமுறை ஒன்றை உருவாக்க அனைத்து இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ.யின் அங்கீகாரம் பெற்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
அதில் மாணவர்களின் குறைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யவும், அதற்கான தீர்வு காண்பதற்குமான ஆன்லைன் வழிமுறையை உடனே உருவாக்குமாறு கல்லூரி தலைமைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாணவர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்வதற்கான ஆன்லைன் முகவரி, குறைதீர்ப்பு குழு உறுப்பினர்களின் தொலைபேசி எண் மற்றும் இ–மெயில் முகவரி உள்ளிட்டவற்றை கல்லூரி நிர்வாகத்தின் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
மேலும் மாணவர்களின் புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள புகார்கள் உள்ளிட்ட நிலவர அறிக்கையும் மாதந்தோறும் ஏ.ஐ.சி.டி.இ.க்கு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.