நீட் தேர்வு: பிரதமருடன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு.
தமிழகத்துக்கு "நீட்' தேர்வு தேவையில்லை என்பதை, பிரதமர் மோடியை வரும் 27-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்த இருப்பதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக கோவைக்கு வெள்ளிக்கிழமை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு என்னென்ன திட்டங்களை வழங்க வேண்டும் என்று நினைத்தாரோ, அத்தனை திட்டங்களும் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்படும்.
புதுக்கோட்டையில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம், முழுவதும் மத்திய அரசினுடையது. இருப்பினும், இந்த விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு செயல்படும். பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம், முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்பதற்காகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சேர்த்து இந்த மனுவையும் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நதி நீர் விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகளை யாரும் பறித்துவிடக் கூடாது என்பதற்காகவே வழக்கு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்துக்கு மருத்துவ பொது நுழைவுத் தேர்வு ("நீட்') தேர்வு தேவையில்லை என்பதால் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. பிறகு, அந்த மசோதா மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வரும் 27-ஆம் தேதி (திங்கள்கிழமை) நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.
தமிழகத்தில் சாலைத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு சுமுகமான முறையில் செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சிலர் வேண்டுமென்றே புரளியைக் கிளப்பி வருகின்றனர். அதனால், அவரது மரணம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடும் அவசியம் எதுவுமில்லை என்றார்.