மின்வாரியத்தில் உதவிப்பொறியாளர் பணிக்கான தேர்வு நடைமுறை மேற்கொள்ள அனுமதி: உயர்நீதிமன்றம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தில் உதவிப்பொறியாளர் பணிக்கான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள எலக்ட்ரிக்கல்,மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட துறைகளில் 750 உதவிப்பொறியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு, கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் அறிவிப்பாணை வெளியிட்டது.
இந்தப் பணியிடங்களுக்கு மின்வாரியத்தில் ஏற்கெனவே -அப்ரன்டீஸ்- ஆக பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், எழுத்து மற்றும் நேர்முக தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பயிற்சி முடித்தவர்கள் தங்களுக்கு எழுத்து தேர்வில் இருந்து விலக்களிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.ரமணி உள்பட 51 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், மற்ற தகுதிகள் சமமாக இருந்தாலும், பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்த அடிப்படையில் மற்ற தகுதிகளும் மனுதாரர்களுக்கு சமமாக இருக்க வேண்டும். மாறாக எந்த சிறப்புரிமையும் கோர முடியாது. எனவே, இந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாகக் கூறிய நீதிபதிகள், பணிக்கான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.