ரேஷன் அரிசிக்கு பதிலாக ஒரு பகுதி கோதுமை இலவசமாக வழங்கப்படும்- தமிழக அரசு
தமிழகத்தில் ரேஷன் அரிசிக்கு பதிலாக அதில் ஒரு பகுதிக்கு கோதுமையை இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அரிசியே பிரதான உணவாக உட்கொள்ளப்பட்டு வருகிறது.
அரிசியை 2 வேளை உணவாக எடுத்துக் கொள்ளும் குடும்பங்களும் அதிகம் உள்ளன. எனவே, தமிழகத்தில் அரிசித் தேவை எப்போதுமே அதிகம் இருந்து வருகிறது.
அரிசியின் தேவையைக் கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் மக்களின் தரத்தை நிர்ணயித்து அரிசியை இலவசமாக தமிழக அரசு வழங்கி வருகிறது.
ஆனால் தற்போது ஊரக பகுதி, நகர்ப்புற பகுதிகள் உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கோதுமை உணவுகளை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோயின் தாக்கத்தினால் டாக்டர்கள் அறிவுரை பேரில் அரிசியை விட்டு கோதுமை உணவுக்கு மாறியவர்கள் பலர் உள்ளனர்.
அதுபோல, சர்க்கரை நோய்க்கு பயந்து ஏதாவது ஒரு வேளைக்கு கோதுமை உணவை சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வட இந்தியர்களின் குடியேற்றம் மளமளவென்று அதிகரித்து வருகிறது. அவர்களின் முக்கிய உணவு கோதுமையாகும்.
எனவே, கோதுமை உணவான சப்பாத்தி, ரொட்டி போன்ற உணவுகள் தமிழகத்தில் சமீபகாலமாக அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஓட்டல்களிலும் கோதுமை உணவுகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் உணவு கலாசாரத்தில் சிறிது மாற்றத்தை கொண்டு வருவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அரிசியின் முக்கியத்துவத்தைக் குறைக்காத நிலையில், ஆனால் கோதுமையையும் மக்கள் பயன்படுத்த வைக்கக்கூடிய நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி அரசு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ரேஷன் கடைகளில் அரிசி வழங்கி வரும் நிலையில், ஒரு விருப்புரிமை (ஆப்ஷன்) தானியமாக கோதுமையை கொண்டுவர அரசு ஆலோசனை செய்து வருகிறது.
உதாரணமாக, 20 கிலோ ரேஷன் அரிசியை ஒருவர் வாங்குகிறார் என்றால், 15 கிலோ அரிசியையும் 5 கிலோ கோதுமையையும் அவர் கேட்டால் அதை அரசு இலவசமாக வழங்கும்.
ஆனாலும் கோதுமை அப்போதைய இருப்புக்கு ஏற்றார்போல விருப்புரிமை உணவாக வழங்கப்படுமே தவிர, வழங்கப்படும் கோதுமை அளவுக்கான விகிதத்தை நிர்ணயிக்கவில்லை.
தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.7.50 என்ற விலையில் கோதுமை வழங்கப்படுகிறது. இலவச அரிசியுடன் இலவச விருப்புரிமை உணவாக கோதுமையைச் சேர்த்த பிறகு, விலைக்கு கோதுமை வழங்குவது நிறுத்தப்பட்டுவிடும்.
தற்போது இதுபற்றிய ஆலோசனையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதில் முடிவு எடுக்கப்பட்டதும் விரைவில் அரசாணை வெளியாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.