புயல் சின்னத்துக்கு பெயர் சூட்டும் வழக்கம் உருவானது பற்றிய சுவாரஸ்ய தகவல்
சென்னை: பிறந்த குழந்தை போல, புயல் சின்னங்களுக்கு பெயர் சூட்டும் வழக்கம் உருவானது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.
ஒரே சமயத்தில் இரண்டு பகுதிகளில் ஏற்படும் புயல் சின்னங்களை வேறுபடுத்திக் காட்டவே புயல் சின்னங்களுக்கு பெயர் சூட்டும் முறை அறிமுகமானது. இதனை முதன் முதலில் ஆஸ்திரேலியாதான் அறிமுகப்படுத்தியது. இந்த முறையினால் வானிலை ஆய்வு மையங்களின் பணி எளிதானது.
அதுவும், ஆஸ்திரேலியா இந்த புயல்களுக்கு என்ன பெயர்களை வைத்தது தெரியுமா? ஆஸ்திரேலியாவில் மக்களிடம் செல்வாக்குக் குறைந்த அரசியல்வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டி மகிழ்ந்தது.
இந்த முறையை 1954ம் ஆண்டு அமெரிக்காவும் பின்பற்றத் தொடங்கியது. அமெரிக்கா பின்பற்றத் தொடங்கி சரியாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2004ம் ஆண்டுதான் நாமும் இதனை பின்பற்றத் தொடங்கினோம்.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டும் முறை 2004ல் துவங்கியது.இதற்காக இந்தியா, மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, இலங்கை ஆகிய 8 நாடுகள் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தின.
இவைகள் தாங்கள் விரும்பும் பெயர்களை பரிந்துரைத்து ஒரு பட்டியல் உருவாக்கப்படும். இதில் ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு பெயர் அடுத்தடுத்து சூட்டப்படுகிறது.
வங்கக் கடலில் தற்போது நாடா புயல் உருவாகியுள்ளது.பெயர் வைக்கும் முறை அறிமுகமாகி இது 35வது புயல் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய புயல் பெயர் பட்டியலில் 64 பெயர்கள் இடம்பெற்றுள்ளன