மின்னணு முறையில் பணப்பரிமாற்றம்.... மத்திய அரசின் பரிசுத்திட்டம் மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் இரு பரிசுத் திட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
மின்னணு முறையில் பணப்பரிமாற்றம்.... மத்திய அரசின் பரிசுத்திட்டம்
மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் இரு பரிசுத் திட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
இதன் படி மின்னணு முறையில் பணம் செலுத்தும் 15 ஆயிரம் பேர் நாள் தோறும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும். இதோடு வாரம் தோறும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், 2ம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், 3ம் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். வரும் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி நடைபெறும் மெகா குலுக்கலில் பொது மக்களில் மூவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய், 50 லட்சம் ரூபாய், 25 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.
மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் செய்யும் வியாபாரிகள் 7 ஆயிரம் பேர் வாரம் தோறும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இது தவிர தனியாக 3 வியாபாரிகள் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய், 2 ஆயிரத்து 500 ரூபாய் பரிசு வழங்கப்படும். அடுத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி நடக்கும் மெகா குலுக்கலில் 3 வியாபாரிகளுக்கு 50 லட்சம், 25 லட்சம், 12 லட்சம் பரிசு வழங்கப்படும். இந்தாண்டு நவம்பர் 8ம் தேதி முதல் அடுத்தாண்டு ஏப்ரல் 13ம் தேதி வரை 50 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரையிலான மின்னணு பணப்பரிமாற்றங்கள் மேற்கொள்பவர்களுக்கு இப்பரிசுகள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
யுபிஐ, யுஎஸ்எஸ்டி, ஆதார், ரூபே கார்டு முறைகளிலான பணப்பரிமாற்றங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். எனினும் இத்திட்டம் நாட்டின் 100 முக்கிய நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது