THIRUPPATHI THIRUMALAI BALAJI | THIRD SATURDAY | TODAY SPECIAL:
புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். புரட்டாசி மாதத்தை பெருமாள் மாதம் என்றே அழைப்பர். 108 திவ்ய தேசங்கள் உள்பட அனைத்து பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி மாத வழிபாடுகள், உற்சவங்கள் மிகவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற பிரசித்தி பெற்ற பெருமாள் தலங்களில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்கும். குலதெய்வ பூஜைகள் செய்யவும், காணிக்கை, நேர்த்திக் கடன்கள் செலுத்தவும் இந்தமாதம் மிகவும்சிறந்தது. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப்பற்களுள் ஒன்றாக அக்னிபுராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுள் திருமாலை வணங்குவது சிறப்பாகும்.மக்கள் நலன் கருது இந்த பதிவினை வெளியிடுவதில் கல்விக்குரல் வலைதளம் பெருமையடைகிறது.
முன்னோர்கள் நினைவேந்தல்:
புரட்டாசி மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம்முன்னோர், பிதுர்லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் சென்றதும், எமதர்மன் முனோர்களை பூமிக்குச் செல்லும்படி அனுமதிக்கிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை முதல் (பிரதமை) நாளிலிருந்து அமாவாசை வரையிலான 15நாட்களுக்கு அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, மகாளய பட்சம் என்பர்; பட்சம் என்பது 15 நாட்களைக் கொண்டதாகும். இந்த நாட்களில் நாம் முன்னோர் வழிபாடு செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்கவேண்டும்; அன்னதானம் செய்யவேண்டும். புரட்டாசி மாதத்தில் மாமிச உணவைத் தவிர்ப்பது நலம். காணமுடியாவிட்டாலும் முன்னோர்கள் நம் அருகே இருப்பதை உணர்ந்து மகாளய அமாவாசையில் சிரார்த்தம் என்று செய்கிறோம். சிரத்தையாகச் செய்வதே சிரார்த்தம். “மனம் முழுவதும் இறந்துபோன தகப்பனையும் தாயையும் தாத்தாவையும் பாட்டியையும் நினைத்து உண்ணுங்கள். “ என்று சொல்வது ஒரு சிறந்த வழிபாடு; கடவுள் வழிபாட்டை விட மேலான வழிபாடாகிறது.
நாராயணா கோபாலா:
புரட்டாசி சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் நைவேத்யங்கள் செய்து பெருமாளை வழிபடுவர். பலர் உண்டியல் ஏந்தி கோவிந்தா, நாராயணா, கோபாலா என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானம் பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியைக் கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். சிலர் பெருமாள் தலங்களுக்கு நடைப்பயணமாகச் சென்று காணிக்கை செலுத்துவர். புரட்டாசி மாதத்தில்தான் திருவேங்கடமுடையானுக்கு பிரமோத்சவமும் நடைபெறுகிறது.
எல்லாம் பெருமாளே!
திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகில் பீமன் என்ற மட்பாண்டத் தொழிலாளி வாழ்ந்து வந்தார். பிறவிலேயே அவருக்குக் கால் ஊனம்; தீவிர பெருமாள் பக்தர். வாழ்நாள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டார். இவருக்கு சாத்திர, சம்பிரதாய, பூஜை வழிமுறைகள் எதுவும் தெரியாது. தொழில் மற்றும் ஏழ்மை காரணமாக கோயிலுக்கும் போகமால் “பெருமாளே நீயே எல்லாம்” என்று மட்டும் சொல்லுவார். வேங்கடவனும், அவரது பக்திக்கு மகிழ்ந்து , அவருக்குத் தன் திருவுருவத்தைக் கனவில் காட்டிய பின்பு மறைந்து விட்டார். பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசிமாத சனிக்கிழமை விடியற்காலை நேரம். பீமய்யாவும், தனக்கு கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே சிலையாக களிமண்ணில் செய்தார். பூ வாங்க பணம் இல்லாததால் மண்ணைச் சிறுபூக்களாக உருட்டி மாலையாகத் தொடுத்து அணிவித்து வணங்கினார்.
பொன்மாலையும் மண்மாலையும்:
அவ்வூர் அரசர் தொண்டைமான் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு, தங்கத்தினால் பூமாலை அணிவித்து வழிபடுவார். ஒரு தடவை மாலை அணிவித்துவிட்டு, மறுவாரம் வந்து பார்த்தபோது பெருமாள் கழுத்தில் மண்ணால் செய்த பூமாலை தொங்கியது. அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. அர்ச்சகர்கள் ஏதாவது தவறு செய்கிறார்களோ என்று குழப்பத்திலேயே அரண்மனைக்குச் சென்று படுத்தார். அன்று அரசரின் கனவில் தோன்றிய பெருமாள், பீமய்யாவின் பக்தியையும் தாம் அதனால் மகிழ்வுற்றதையும் கூறினார்.
மண் சட்டியில் நைவேத்தியம்:
மன்னர் பீமய்யாவின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு வேண்டிய உதவி களையும், பொன்னையும், பொருளையும் கொடுத்தார். ஆனால் அதைக் கண்டு சிறிதும் மயங்காத பீமய்யா இறுதிநாள் வரை பெருமாள் விரதம் இருந்து வைகுண்டப்பதவி அடைந்தார். அந்த பக்தரின் நினைவாக இன்றளவும் ஏழு மலையானுக்கு மண் சட்டியிலும் நைவேத்தியம் செய்கின்றனர்.
சனிக் கிழமை விரதம்:
திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பு என்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது மரபுவழி நம்பிக்கையாகும். சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், நீர் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.
வீட்டில் பூசை செய்தல்:
காலையில் நீராடி நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும். பூஜை அறையில் வெங்கடாசலபதியின் படம் அல்லது சிலையை வைத்து முன்னே அமர வேண்டும். விளக்கை ஏற்றி, அலர்மேலுமங்கையுடன் உடனுறையும் வேங்கடா சலபதியை வணங்க வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்து தூபதீபம் காட்ட வேண்டும். பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும். "ஓம் நமோ நாராயணா'' என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். இதே போல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும். அன்று மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும். மாவிளக்கு ஏற்றி பூசை செய்யும்போது சர்க்கரைப் பொங்கல், வடை படைக்க வேண்டும். புளிப்புச்சுவை திருமகளுக்கு விருப்ப மானது என்பதால் புளிச்சாதம் நைவேத்தியமும் செய்வர். இயன்றவர்கள் திருப்பதிக்குச் சென்று தமது காணிக்கையைச் செலுத்தி வருவர். புரட்டாசி மாதத்தில் எழுமலையான் நம் வீடுளுக்கு வருவதாகவும் நம்பிக்கையுள்ளது. மூன்றாவது சனிக்கிழமை வீடுகளில் தளியல் எனும் நைவேத்தியம் போடுவது வழக்கமாக உள்ளது.
இவ்வாண்டில் புரட்டாசி சனிக் கிழமைகள்:
2015ஆம் ஆண்டில் புரட்டாசி (செப்டம்பர்-அக்டோபர்) மாதத்தில் ஐந்து சனிக்கிழமைகள் சிறப்பு பெறுகின்றன. செப்டம்பர் மாதத்தில் 19 மற்றும் 26 தேதிகளிலும், அக்டோபர் மாதத்தில் 03, 10 மற்றும் 17ஆம் தேதிகளிலும் புரட்டாசி சனிக்கிழமைகளாகும். ஐந்து சனிக்கிழமைகளுக்கும் ஐந்து உபயக்காரர்கள் குடும்பத்தினர் பங்கேற்கின்றனர். ஐந்து சனிக்கிழமை களிலும் விடியற்காலை 4.00 மணிக்கு சுப்ரபாதம், 4.30 மணிக்கு விசுவரூப தரிசனம், கோபூசை 4.45 மணிக்கு மூலவர் திருமஞ்சனம் 5.45 மணிக்கு விசேஷ ஆராதனம், அஷ்டோத்திரம், நாமாவளி பிரசாதம், நண்பகல் 12.00 மணிக்கு அன்னதானம் மாலை 6.30 மணிக்கு நித்திய பூசை, இரவு 7.00 மணிக்கு விசேஷ பூசை, 7.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி உடனுறை ஸ்ரீநிவாசபெருமான் சிறப்பு அலங்காரம் மற்றும் புறப்பாடு, உட்பிரகாரம் வலம் வருதல், இரவு 10.00 மணிக்கு திருக்காப்பிடுதல் நடைபெறும். நல்லருள் பெற வருக!
சத்தியலோகத்தில் இருந்து நான்முகன் பிரம்மா, பூலோகம் வந்து, திருப்பதி ஏழுமலையானுக்கு திருவிழா நடத்துகிறார். இதற்கு புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவம் என்று பெயர். திருப்பதியை "வேங்கடம்' என்றும் அழைப்பர். "வேங்கடம்' என்றால்" பாவம் எரித்து பொசுங்கும் இடம்' என்று பொருள். புரட்டாசி மாதத்தில் திருப்பதி பெருமாளை மனதில் நினைத்தாலே பாவம் தீரும் புண்ணியம் பெருகும் என்பது ஐதீகம். திருப்பதி வேங்கடசப் பெருமாளே நம்மலையக மலேசியத் திருநாட்டில், பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீஅலர்மேல் மங்கா உடனுறை ஸ்ரீ வேங்கடாசலபதியாக எழுந்தருளி காட்சியளிக்கின்றார்.
இவ்வாண்டின் ஐந்து புரட்டாசி சனிக்கிழமைகளிலும் பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீஅலர்மேல் மங்கா உடனுறை ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளை தரிசித்து நல்லருள் பெறுவோமாக.